குமரியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 'சஜாக் ஆபரேஷன்' - தீவிரவாத ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில்  சஜாக் ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. கடலோரப் பாதுகாப்புப் படையினர் இந்தியக் கடல் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சஜாக் ஆபரேஷன் என்ற பெயரில் கடலோரப் பாதுகாப்புப் படையினர், இந்தியக் கடல் பகுதிகளை அதிநவீன படகுகள் மூலம் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் இந்தியாவின் தென் முனையாக கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. மேலும் கடல் சார்ந்த சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் சஜாக் ஆப்ரேஷன் கடலோரப் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரியில், தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடலோர காவல் துறையினர் இணைந்து அதிவிரைவு ரோந்து படகுகளில் பைனாக்குலர்கள் மூலம் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை மாலை 5 மணி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் யாரேனும் சந்தேகிக்கும்படி சென்றால், உடனடியாக கடலோர காவல் துறையினருக்கு தெரிவிக்கும்படி மீனவ மக்களிடம்  போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: