வீட்டு வசதி, குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கொரோனா வார்டாக மாற்றம்: வீடு ஒதுக்கப்பட்டு 5 மாதங்களாகியும் ஒப்படைப்பதில் சிக்கல்; பொதுமக்கள் அச்சம்

சென்னை: வீட்டுவசதி மற்றும் குடிசை மாற்று வாரியம், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், அந்த வீடுகள் ஒதுக்கீடு பெற்ற பொதுமக்கள், ஊழியர்கள் 5 மாதங்களாகியும், குடியேற முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் கொரோனா வார்டாகவும் தனிமைப்படுத்தும் பகுதியாகவும் மாற்றப்பட்டது. அதே போன்று பொதுமக்களுக்காக வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிய அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையில் வியாசர்பாடியில் புதிதாக கட்டப்பட்ட 1000 குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டில் 6 ஆயிரம் குடியிருப்புகள், சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 500 ஊழியர்கள் குடியிருப்புகள் உட்பட பெரும்பாலான இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு வீட்டிற்கு 4 பேர் வீதம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ெகாரோனா பாதிப்புக்கு முன்பு இந்த குடியிருப்புகள் அனைத்தும் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. அதே போன்று தாடண்டர் நகரில் அரசு ஊழியர்களுக்கும் அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யபட்டன. இந்த நிலையில், தற்போது அந்த குடியிருப்புகள் அனைத்தும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால், கடந்த 5 மாதங்களாக வீடு ஒதுக்கப்பட்டும், பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, அந்த குடியிருப்புகள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அங்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் காலியாக உள்ளது. குறிப்பாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 படுக்கைகள் காலியாக உள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் தனியார் மருத்துவமனைக்கு தான் செல்கின்றனர். இந்த நிலையில், கொரோனா வார்டாக மாற்றப்பட்ட வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்கப்படும் பட்சத்தில் அந்த வீடுகளில் தகுந்த முன்னேற்பாடுகள் செய்து அதன்பிறகு ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: