வாலிநோக்கம் அரசு உப்பளத்தில் உடல் உபாதைகளால் தொழிலாளர்கள் பாதிப்பு: மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

சாயல்குடி: கடலாடி ஒன்றியம், வாலிநோக்கத்தில் மாரியூர்-வாலிநோக்கம் ஒன்றிணைந்த கூட்டு நிறுவனமான, தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 110க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்களும், 1,350 ஒப்பந்த பணியாளர்களும், ச500க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர். 2017 முதல் இரட்டை சுழற்சி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் நாள் ஒன்றிற்கு 5 டன் வரை உப்பு உற்பத்தி செய்யும் திறன் வசதிகள் உள்ளது. இதனால் மாதத்திற்கு ரூ.25 லட்சம் வரை லாபம் ஈட்டப்படுகிறது. லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தில், வேலை பார்த்து வரும் அனைத்து பணியாளர்களுக்கும் கடுமையான வேலைகள் இருப்பதால் இவர்களுக்கு கை, கால், இடுப்பு போன்ற உடல் வலிகள், கண்பார்வை குறைபாடு, சுவாச பிரச்னை உள்ளிட்ட உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படுகிறது.

மேலும் உடல்வலியை போக்கிக்கொண்டு பணிக்கு வருவதற்காக மெடிக்கல் ஷாப்களில் உடல்வலி மாத்திரைகள், நிவாரணிகளை வேலைநாட்களில் வாங்கி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பணியாளர்களுக்கு பக்கவிளைவுகள், துணை நோய்கள் வரும் அபாயம் உள்ளது. இதுபோன்ற உடல் உபாதைகளால் வயதான காலத்தில் கடும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. உப்பு நிறுவனத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் வாலிநோக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. ஆனால் அங்கு பரிசோதனை உள்ளிட்ட வசதிகள், போதிய மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில்லை.எனவே தொழிலாளர்கள் நலன் கருதி உப்பு நிறுவனத்திற்கென பிரத்யேகமாக ஒரு மருத்துவர் தலைமையில் செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களை நியமித்து நிரந்தரமாக தொழிலாளர் மருத்துவமனை அமைக்க வேண்டும்.

கண், மூக்கு, தொண்டை, எலும்பு, நுரையீரல் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைக்காக சிறப்பு மருத்துவர்களை கொண்டு மாதத்தில் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் (சிஐடியு) சங்க தலைவர் பச்சமாள் கூறுகையில், ‘கடும் வெயிலில் கடல் உப்பு காற்றில், உப்பளத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு அம்சபொருட்களான கையுறை, கண்ணாடி, முகமூடி, பாதுகாப்பு உடைகள் போன்றவை வழங்கவில்லை. மேலும் உப்பளத்தில் நிழற்கூடம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக கிடையாது. இத்தகைய சூழலில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் உடல்வலி உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். வாலிநோக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

அங்கிருந்து ஒரு செவிலியர் உப்பு நிறுவன பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகள் செய்ய மருத்துவர் கிடையாது. போதிய மருந்து, மாத்திரைகள் கிடையாது. இதனால் வெளி மெடிக்கல் ஷாப்களில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொழிலாளர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில், வருமானம் இன்றி தொழிலாளர் குடும்பங்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்ற அவலம் இருக்கிறது. எனவே வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்திற்கென சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தி தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories: