இடைத்தரகர்களோ கமிஷனோ இல்லை: ரூ.17,000 கோடி ஒரே கிளிக்கில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்...பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: கடந்த மே மாதம் 12ம் தேதியன்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தினை அறிவித்தார். அதில், ஒரு லட்சம் கோடி  வேளாண் கட்டமைப்புக்கும் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம், விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதற்கான  திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டத்துடன் பிரதமர் கிசான் திட்ட அடிப்படையில், ஆறாவது தவணையாக 17 ஆயிரம் கோடியை 8.5 கோடி விவசாயிகளுக்கு பிரதமர்  மோடி வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தப்பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா-பீகார் இடையே விவசாய ரயில் சேவை  தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவை மூலம் வரும் காலங்களில் விவசாயிகள் பெருமளவில் பயனடைவர். பிரதமர்-கிசான் சம்மன் நிதியின் ரூ.17,000 கோடி ஒரே கிளிக்கில் 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட்  செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்களோ கமிஷனோ இல்லை, அது நேராக விவசாயிகளிடம் சென்றது. திட்டத்தின் நோக்கம் பூர்த்தி செய்யப்படுவதால் நான் திருப்தி அடைகிறேன் என்றார்.

ஒரே நாடு, ஒரே சந்தை என்பது சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வேளாண், வேளாண் சார்ந்த தொழில்களை கொண்டு வர முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வோரே  இனி நேரடியாக விற்பனை செய்ய முடியும். பலராமரின் பிறந்த நாளான ஹல்ஷ்டி இன்று அனைத்து நாட்டு மக்களுக்கும், குறிப்பாக விவசாய தோழர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மிகவும் புனிதமான இந்த சந்தர்ப்பத்தில், நாட்டில் விவசாய  வசதிகளை தயாரிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி தொடங்கப்பட்டது என்றார்.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள், அதிகாரிகளுடன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: