துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் விபத்து: 190 பயணிகளில் 2 பேர் உயிரிழப்பு

கோழிக்கோடு: துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த சிறப்பு விமானத்திலிருந்து 190 பயணிகளில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. ஓடுதளத்தில் நிலைதடுமாறி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது. விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமானத்தில் 190 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட சிறப்பு விமானம் ஒன்று கோழிக்கோடு வந்தது. இரவு 8 மணிக்கு கோழிக்கோடு வந்த சிறப்பு விமானம் தரையிறங்கும் போது விமான நிலையத்தில் ஓடுதளத்தை தாண்டி விமானம் சென்றதால் அந்த விமானம் விபத்துக்குள்ளானது. விமான ஓடுதளத்தின் அருகில் உள்ள சாலையில் விழுந்த விமானம் இரண்டாக உடைந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விமானத்தை ஓட்டி வந்த பைலட்களும் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்தின் போது பெரும் மழை பெய்ததால் உடைந்த விமானம் தீப்பிடிக்கவில்லை. இதனால் உயிர்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் உடைந்து கிடக்கும் விமான பாகத்தை மீட்டப்பிறகே உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்கள் விவரம் குறித்து முழு விவரம் கிடைக்கும் என்று தெரிகிறது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன. 10திற்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் விமான நிலையத்திற்கு விரைந்துள்ளன. மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கியிருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். சில மணி நேரத்திற்கு பிறகே மீட்புப்பணிகள் நிறைவு பெறும்.

Related Stories: