சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கு..: சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

மதுரை: சாத்தான்குளம் மகேந்திரன் மரண வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் கடந்த மே மாதம் 18ம் தேதி ஜெயக்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் துரை உள்ளிட்டவர்களை தேடி வந்தனர். இதுதொடர்பாக துரையின் தம்பி மகேந்திரனை, கடந்த மே மாதம் 23ம் தேதி இரவில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பான்குளத்தில் வைத்து, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின்போது மகேந்திரனை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை 2 நாட்கள் கழித்து போலீசார் விடுவித்தனர். இந்த நிலையில் மகேந்திரனின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் மாதம் 13ம் தேதி மகேந்திரன் உயிரிழந்தார். இதையடுத்து மகேந்திரனின் தாயார் வடிவு, போலீசார் தாக்கியதில்தான் தனது மகன் மகேந்திரன் உயிரிழந்ததாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணையில் உயிரிழந்ததாக கூறப்படும் மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சி.பி.சி.ஐ.டி.க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது. மேலும், சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த விசாரணை தொடர்பாக முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இல்லையெனில் விசாரணை செய்ததை ஒரு மாதத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: