தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும்! : மு.க.ஸ்டாலின்!!

சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (07-08-2020)  அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலும், முத்தமிழறிஞர் கலைஞர் துயில் கொண்டிருக்கும் அவரது நினைவிடம், அவர் வாழ்ந்த கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனி இல்லங்கள், அவரது மூத்த பிள்ளையான முரசொலி அலுவலகம், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் முத்தமுழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் போற்றினார்.

அடுத்ததாக, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வழியாகத் திறந்து வைத்து உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க சிலையை நான் உங்கள் அனைவருடைய அன்பு வேண்டுகோளுடன் திறந்து வைத்துள்ளேன்.

இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ள கழக நிர்வாகிகளே!

இக்காட்சியை தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகக் கண்டு வருகிற தமிழ்ப்பெருங்குடி மக்களே!

உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே... என்ற வார்த்தை மூலமாக இலட்சக்கணக்கான மக்களை தனது காந்தக் குரலால் கட்டிப் போட்டு வைத்திருந்த நம்முடைய இனிய தலைவர் கலைஞர் அவர்கள், நம்மை விட்டு வெகு தூரத்துக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் நாள் தலைவர் கலைஞர் அவர்கள் வங்கக் கடலோரம் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.

அதுவரை உடலால் இருந்து நம்மை இயக்கிய தலைவர் அவர்கள், இன்று உணர்வால் நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது நினைவு தாங்கிய இடங்களில் எல்லாம் அவரது திருவுருவச் சிலைத் திறந்து வைப்பது என்று முடிவெடுத்தோம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அவர்களது திருவுருவச் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள். கலைஞரின் குருகுலமான தந்தை பெரியாரின் ஈரோட்டிலும், தலைவரை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவின் காஞ்சியிலும்,

அவருக்கு முதல் களமாக அமைந்து, அவரைப் போராட்டவீரராக மாற்றிய திருச்சியிலும்,

திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய சேலத்திலும், அவரின் மூத்த பிள்ளையாம் முரசொலி அலுவலகத்திலும், அவர் உருவாக்கிய முத்தமிழ்ப்பேரவையிலும், தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை நான் திறந்து வைத்தேன்.

இப்படியே தமிழகம் முழுவதும் பல ஊர்களில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை அமைக்க இருந்தோம். இடையில் கொரோனா காரணமாக அத்திறப்பு விழாக்களை நடத்த இயலாமல் இருக்கிறோம்.

ஆனால் இன்றைய தினம், இரண்டாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர் புகழ் போற்றும் வகையில் திருக்குவளையில் முத்தமிழறிஞரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கிறோம்.

சென்னையில் இருந்தாலும், என்னுடைய நினைவெல்லாம் திருக்குவளையில்தான் இருக்கிறது. கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால், நான் அங்கு வந்திருப்பேன். கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் என்னால் அங்கு வர இயலாத நிலை ஏற்பட்டது. சென்னையில் இருந்தபடியே தலைவர் கலைஞரின் சிலையைத் திறந்து வைக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள், பிறந்த வீட்டில், தவழ்ந்த வீட்டில், விளையாடிய வீட்டில், வளர்ந்த வீட்டில் இன்று அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

அந்தச் சிலையைப் பார்க்கும் போது, தலைவர் அவர்களே மீண்டும் திருக்குவளை வீட்டுக்கு வந்தது போல இருக்கிறது. மார்பளவுச் சிலை மனங்கவர்ந்த சிலையாக இருக்கிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் தமிழினத் தலைவராகப் போற்றப்பட்டவர். தலைநகர் சென்னை முதல், கடல்நகர் குமரி வரைக்கும் உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்கும் திட்டங்கள், சேவைகள், உதவிகள் செய்தவர். அவர் போகாத கிராமம் இல்லை, அவர் பேசாத நகரங்கள் இல்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என வாழ்ந்த புறநானூற்றுப் புலவர் அவர்.

அவரிடம் உங்களுக்குப் பிடித்த ஊர் எது என்று கேட்டபோது, நான் பிறந்த திருக்குவளை என்றுதான் சொல்வார். அந்த அளவுக்கு, தான் பிறந்த ஊர் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? என்று ஒரு சினிமா பாட்டு இருக்கிறது அல்லவா? அந்த மாதிரி தனது ஊர் மீது பாசம் வைத்திருந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

உங்களுக்குப் பிடித்த கவிதை வரி எது? என்று அவரிடம் கேட்டபோது, கவிஞர் சுரதா எழுதிய வரிதான் பிடிக்கும் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

ஆருயிர்த் தலைவர் கலைஞர் அவர்களுக்கும் - என்னுடைய அன்பு அன்னையார் தயாளு அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது அந்த மணவிழாவை வாழ்த்தி கவிஞர் சுரதா அவர்கள் ஒரு கவிதை தீட்டினார்கள்.

“உருக்குலையா மங்கையவள் ஒளிமுகத்தை

முத்தமிட கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை

- என்று கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய வரிதான் தனக்குப் பிடித்த வரி என்று சொல்லி இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு திருக்குவளை ஊரைக் காதலித்தவர் கலைஞர் அவர்கள்.

“எழில் நிறைந்த திருக்குளம்! குளத்தைச் சுற்றி சோலை! எதிரே சிவன் கோயில்! மேற்கு எல்லையில் முனியன் கோயில்! தெற்கு எல்லையில் அய்யனார் கோயில்!  இவை யெல்லாம் நான் கண்ட திருக்குவளை. அவ்வளவு அழகான ஊர் - என்று நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் அவர்கள் திருக்குவளையை வர்ணித்து எழுதி இருப்பார்கள்.

இப்போது அவர் சிலையாக எழுந்திருக்கும் இந்த வீட்டில்தான் தலைவர் அவர்கள்

முத்துவேலருக்கும் - அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்கள்.

தலைவருக்கு முன்னால் பெரியநாயகம், சண்முகசுந்தரத்தமாள் ஆகிய இரண்டு சகோதரிகள் இருந்தார்கள். மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் கலைஞர் அவர்கள்.

12-ஆம் வயது வரைக்கும் இந்த வீட்டில்தான் கலைஞர் அவர்கள் வாழ்ந்தார்கள். திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் படித்தார்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மண்ணில் எழுத வைத்து சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி திருக்குவளை மண்ணில் எழுதிப் படித்தவர்தான் இம்மண்ணைக் காக்கும் தலைவராக வளர்ந்தார். அத்தகைய திருவாரூர் மண்ணில் இன்றைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தலைவர் கலைஞர் அவர்கள் பல்துறை ஆற்றல் பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆற்றல் அவரது தந்தையார், என்னுடைய தாத்தா திரு. முத்துவேலர் மூலமாக வந்தது. முத்துவேலர் அவர்கள் பல்துறை ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார்கள். அவர் விவசாயி, வித்வான், கவிகள் எழுதுவார், வடமொழி தெரியும், வைத்தியம் பார்ப்பார், நோய்களுக்கு மாந்திரீகம் போடுவார், கதைப் பாடல்கள் எழுதுவார், கதாகலாட்சேபம் செய்வார், பாம்புக்கடியைக் குணப்படுத்துவார், மீன் பிடிப்பார் - இப்படி பல ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார் முத்துவேலர் அவர்கள். அவர் நம்முடைய தலைவர் அவர்களை இசை கற்றுக் கொள்ள இளமையிலேயே அனுப்பி இருக்கிறார். தலைவரும் ஆர்வமாகச் சென்றுள்ளார். ஆனால் இசை கற்பித்த இடத்தில் இருந்த கட்டுப்பாடுகள், தலைவர் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

சட்டை போடக்கூடாது - துண்டை இடுப்பில் கட்ட வேண்டும் - செருப்பு அனியக் கூடாது - என்ற கட்டுப்பாடுகளை, தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக கலைஞர் அவர்கள் பார்த்தார்கள்.

“நான் மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று 95 வயது வரைக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள் என்றால், அந்தச் சுயமரியாதைக்கான விதை போடப்பட்ட இடமான திருக்குவளையில் கலைஞர் அவர்களுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறுவயதிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் நாடகம் போடத் தொடங்கியது, கலை ஆர்வம் கொண்டவராக மாறியதும் இதே திருக்குவளையில்தான்.

12 வயதுக்குப் பிறகு இரண்டாம் பாரம் படிப்பதற்காக திருவாரூர் சென்று விட்டாலும், விடுமுறைக்கு திருக்குவளைக்கு வந்துவிடுவார்கள்.

கச்சணத்தில் இறங்கி காராபூந்தி வாங்கி வைத்துக் கொண்டு திருக்குவளைக்கு நடந்து போவேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சட்டமன்ற உறுப்பினராக ஆனாலும், அமைச்சராக ஆனாலும், முதலமைச்சராக ஆனாலும் தனது திருக்குவளையை மறக்க மாட்டார்கள். திருக்குவளைக்கு வராமல் இருக்கவும் மாட்டார்கள்.

தான் வாழ்ந்த இல்லத்தில் அன்னை அஞ்சுகம் பேரால் படிப்பகமும், தந்தை முத்துவேலர் பெயரால் நூலகமும் அமைத்தார்கள். படிப்பகமும் நூலகமும் தான் அவருக்குப் பிடித்த இடம் என்பதால் அங்கேயே சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றதும் தமிழ்நாடே சோகத்தில் ஆழ்ந்தது. அதிலும் குறிப்பாக திருக்குவளை அதிகம் சோகமாகக் காட்சியளித்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் அவர் உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டி நின்ற காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து நான் கண்கலங்கினேன்.

எழுந்து வா தலைவா!

எழுந்து வா!

திருக்குவளைக்கு மீண்டும் வா தலைவா! மீண்டும் வா!

- என்று அன்றைய தினம் திருக்குவளை மக்கள் அனைவரும் கண்ணீரால் கேட்டுக் கொண்டார்கள்.

இதோ தலைவர் கலைஞர் அவர்கள் மீண்டும் வந்திருக்கிறார்கள். சிலையாக எழுந்து வந்துள்ளார்கள்.

குளித்தலை, தஞ்சாவூர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் - என எத்தனை தொகுதிகளில் தலைவர் கலைஞர் அவர்கள் போட்டியிட்டாலும் இறுதியாய் வந்து நின்ற இடம் திருவாரூர். ஒரு முறையல்ல; இரண்டு முறை வென்ற இடம் திருவாரூர்.

அவர் முதன்முதலாக நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடத்தான் விரும்பினார். ஆனால் பேரறிஞர் அண்ணா அவர்கள் குளித்தலை தொகுதியில் போட்டியிட வைத்தார்கள். அந்த ஆசையை இறுதியில் வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள் தலைவர் அவர்கள்.

திருக்குவளையில் பிறந்து - திருவாரூர் மகனாகவே இறுதியில் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் கலைஞர் அவர்கள்.

இப்படி ஒரு தந்தைக்கு மகனாகப் பிறந்ததைப் போன்ற பெருமையை விட எனக்கு வேறு என்ன வேண்டும்?

அவரை நினைக்கும் போது எனக்கே பெருமையாக இருக்கிறது.

எனக்கே கர்வமாக இருக்கிறது.

நான் மட்டும் அவர் மகனல்ல்ல; நீங்கள் அனைவரும் அவருடைய பிள்ளைகள்தான். இலட்சோப லட்சம் உடன்பிறப்புகளையும் தனது பிள்ளையாகத்தான் அவர் மதித்தார்; பழகினார்; அரவணைத்தார்.

அதனால்தான் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகமே அவருக்காகக் கண்ணீர் விட்டது.

அந்த நன்றியின் அடையாளமாகத்தான் இன்றைக்கு இந்தச் சிலையை எழுப்பி இருக்கிறோம்.

இனி திருக்குவளை செல்பவர்கள் அனைவருக்கும், அந்த வீட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள் என்ற நினைவுகள் வரும்.

கலைஞர் அவர்கள் எங்கும் செல்லவில்லை, இங்கே தான் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும்.

அத்தகைய உணர்ச்சியின் அடையாளமாகத்தான் இந்தச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறேன்.

முத்தமிழறிஞர் புகழ் வாழ்க!

அவர் காட்டிய பாதையில் எந்நாளும் நடப்போம் என்று கூறி விடை பெறுகிறேன்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பின்னர், தன் வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காக உழைத்த தமிழினக் காவலர் கலைஞர் அவர்களது நினைவைப் போற்றும் வகையில், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் முன்கள வீரர்களாகச் செயல்பட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரது தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும்!

அவ்வழி நின்று,தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரை காக்க அயராது பாடுபடும் முன்களவீரர்களுக்கு உங்கள் நினைவு நாளில் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்..

Related Stories: