நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச் சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த 4 நாட்களாக நிலை கொண்டு இருந்த காற்றழுத்தம் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது. பின்னர் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அத்துடன் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இந்த காரணங்களால் தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 580 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட அதிகம்.

இதையடுத்து, வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் வழியாக சென்று குஜராத் பகுதியில் நுழைந்து அரபிக் கடலில் இறங்கியது. நீலகிரி மாவட்டத்தில் மேற்குப்பகுதியில் மிக கனமழை பெய்தது சுமார் 580 மிமீ வரை கடும் மழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலை 8ம் தேதி வரை நீடிக்கும். இதையடுத்து 9ம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காற்றழுத்தம் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு திசையில் இருந்து கடும் காற்று நேற்று முன்தினம் முதல் வீசிக் கொண்டு இருக்கிறது. அது உடுமலைப் பேட்டை, கோவை, கரூர் நாமக்கல் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் தெற்கு பகுதிவரை வீசி வருகிறது. இந்த காற்று விலகியதும் தமிழகத்தில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும்.  

இதற்கு ஆதாரமாக தென்மேற்கு பருவக் காற்று, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரம் அடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தின் மலைச் சரிவு பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழையும், கோவை, தேனி, மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும். மேலும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை, மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

Related Stories: