×

குமரியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மசாஜ் சென்டர் பெயரில் ஹைடெக் விபசாரம்: வாலிபர் கைது; இளம்பெண் மீட்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே ஊரடங்கு காலத்தில் ஹைடெக் விபசாரம் நடத்திய மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வாலிபரை கைது செய்தனர். அங்கிருந்த இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாவாகவும், ஆன்மீக யாத்திரையாகவும், சிகிச்சைக்காகவும் ஏராளமானோர் வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக இங்கு மசாஜ் சென்டர்கள் பல உள்ளன. இங்கு மூலிகை குளியல், எண்ணெய் மசாஜ், ஆவி குளியல் போன்ற சிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன.

ஆனால் சிலர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார விடுதி நடத்தி வருவதாக பொது மக்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தன. அதன்படி கடந்த 5 மாதங்களுக்கு முன்புவரை போலீசார் அவ்வப்போது இதுபோன்ற சென்டர்களில் அதிரடி சோதனை நடத்தி விபசாரத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்களை கைது செய்தனர். இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டன. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சில மசாஜ் சென்டர்கள் ரகசியமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. எனவே மசாஜ் சென்டர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் தெற்குகுண்டல் பகுதியில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டருக்கு மர்ம நபர்கள் ரகசியமாக வந்து செல்வதும், இரவு நேரத்தில் இளம் பெண்களுடன் சிலர் வந்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் போலீசார் அந்த மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து 2 பேர் தப்பியோடிவிட்டனர். போலீசார் உள்ளே சென்றபோது அங்கு ஒரு இளம் பெண்ணும், வாலிபரும் இருந்தனர். அந்த வாலிபர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் என்றும், இளம் பெண் சென்னையை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

போலீசார் முத்துகுமாரை கைது செய்தனர். இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மசாஜ் சென்டர் பெயரில் இங்கு விபசார விடுதி நடந்து வந்துள்ளது. இதற்காக பெரிய நெட்வொர்க் செயல்பட்டு வந்துள்ளது. மேலும் இதற்காக ஒரு வாட்ஸ்அப் குரூப் தொடங்கி உள்ளனர். அந்த குரூப்பில் இணைந்துள்ளவர்கள் சென்டருக்கு வரும் கஸ்டமர்கள் என கூறப்படுகிறது.
இதில் குமரி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஐபிகளின் பெயர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

குரூப் அட்மின் அவ்வப்போது பெண்களின் புகைப்படங்களை அதில் பதிவேற்றம் செய்வார். இதை பார்க்கும் கஸ்டமர்கள் மசாஜ் சென்டருக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. போலீசாரை பார்த்ததும் தப்பியோடியவர்கள் யார்? இந்த சென்டருக்கு அவ்வப்போது வந்து சென்ற விஐபிகள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கால் மசாஜ் சென்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி இந்த மையத்தை திறந்து விபசாரம் நடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kumari: Youth ,massage center , Kumari, Curfew, Massage Center, Hi-Tech Prostitution
× RELATED மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்: 3 பெண்கள் மீட்பு: புரோக்கர் கைது