ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம்: மென்பொறியாளர் அற்புத சேவை

திருப்பூர்: குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் முக்கியமாகும். ஆனால் தாய் இல்லாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும். அவர்களுக்கும் தாய் பால் கிடைக்க மென்பொறியாளர் ஒருவர் அற்புத சேவையாற்றி வருகிறார். பிறக்கும் ஓவ்வொரு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் உயிர் பால். குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எவ்வளவு அவசியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் இருக்கும் குழந்தைகளுக்கு தாய் பால் கிடைக்கும்.

ஆனால் வேண்டாம் என்று தூக்கி குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகள், பிறக்கும் போதே தாயை இழந்த பிஞ்சுகள், போதிய தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் எப்படி கிடைக்கும்? இந்த கேள்விகள் மனதில் எழ தாய் பாலை தானமாக பெற்று கொடுக்கும் உயர்ந்த பணியை செய்து வருகிறதா திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரூபா செல்வநாயகி. ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உயிர் பாலான தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக Amirtham breastmilk donation என்ற அமைப்பை நடத்தி வருகிறார் ரூபா.

தனி ஒருவராக கோவை அரசு மருத்துவமனை மூலம் தாய்மார்களிடம் இருந்து தாய் பாலை தானமாக பெற்று கொடுத்து வருகிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களை சேர்ந்த தாய்மார்களை  சமூக வலைதளங்கள் மூலமாக ஒண்றிணைத்து அவர்களிடம் இருந்து மாதம் ஒரு முறை தாய்ப்பால் சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கி வருகிறார். கொடையாக பெறப்பட்ட தாய்ப்பால் பல கட்ட தர பரிசோதனைகளுக்கு பிறகு ஓராண்டு வரை பாதுகாத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய்மார்களை ஒருங்கிணைத்து சுமார் 800 லிட்டர் தாய்ப்பாலை கொடையாக பெற்று தந்திருக்கிறார். ரூபா மட்டுமல்ல தாய்ப்பால் கொடுத்த அனைவரும் முகமறியாத குழந்தைகளுக்கு தாயாக உயர்ந்து நிற்கின்றனர்.

Related Stories: