மதுக்கடை மூடல் எதிரொலி: சென்னையின் புறநகர் பகுதியில் வேனில் வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை!!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மது விற்பனைக்கு தடை உள்ள நிலையில், ஆவடி அருகே சட்டவிரோதமாக வேனில் வைத்து மது விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய கடைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது 7ம் கட்ட ஊரடங்கானது அமலில் உள்ளது. இவற்றில் பல்வேறு தளர்வுகளும் மேலும் பல கட்டுப்பாடுகளும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் அங்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனையானது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அங்கிருந்து மது பாட்டில்களை வாங்கி கொண்டு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோன்ற செயல்களால் மேலும் கொரோனா தொற்றானது அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதிலும் சென்னை ஆவடி பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனையானது வேனில் வைத்து சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது. இதில் மது விற்பனை நடைபெறும் பகுதிகளுக்கு அருகில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் யாரேனும் வந்தால் உடனடியாக தகவல் அளிக்கும் வகையில் அந்த நபர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பருத்திப்பட்டு பகுதியிலும் மது விற்பனையானது சட்டவிரோதமாக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: