ராமர் கோவிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், கலாச்சார சபைக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவது தேசிய ஒற்றுமையின் நிகழ்வாக உள்ளது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் மீண்டும் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா பரவல் இருப்பதால் பல்வேறு கெடுபிடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதி முழுவதும் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வருவதை முன்னிட்டு அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். இதற்கிடையில், கொரோனாவால் பொலிவிழந்து காணப்பட்ட அயோத்தி நகரம் பூமி பூஜையால் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எளிமை, தைரியம், கட்டுப்பாடு, தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை ராமர் என்ற பெயரின் சாராம்சமாகும். ராமர் எல்லோரிடமும் இருக்கிறார்.

கடவுள் ராமர் மற்றும் தாய் சீதையின்  அருள் உரை மற்றும் அருளால், ராம்லாலா கோவிலின் பூமிபூஜை விழா தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் கலாச்சார சபைக்கு, ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது, என கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமாயணம் உலக நாகரிகத்திலும், இந்திய துணைக் கண்டத்திலும் ஆழமான மற்றும் அழியாத முத்திரையை விட்டு சென்றுள்ளது. கடமை, அன்பு, தியாகம், தைரியம், பெரிய மனம் மற்றும் சேவை ஆகியவற்றின் மதிப்புகளை தலைமுறைகளுக்குக் கற்பித்துள்ளது. பல ஆண்டுகளாக, ராமரின் பாத்திரம் இந்திய துணைக் கண்டத்திற்கு உதவியது. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர், அவர் அனைவரின் நலனையும் விரும்புகிறார். அதனால்தான் அவர் மரியாதா புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார், என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: