கந்த சஷ்டி வீடியோ வெளியிட்ட விவகாரம் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கந்த சஷ்டி குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைதான 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கந்த சஷ்டி கவசம் தொடர்பாக கருப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் விடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சேனலின் நிர்வாகி செந்தில் வாசன், சுரேந்திரன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் (32) மற்றும் வீடியோ எடிட்டர் குகன் (23) ஆகியோரை போலீசார்  கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில், தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, தங்களை போலீசார் தவறாக கைது செய்து விட்டனர். எனவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சோமசுந்தரம், குகன் ஆகியோர எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ரோசிலின் துரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதார் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், மேற்கண்ட இருவரும் அந்த சேனலின் உரிமையாளர் கிடையாது, அந்த விடியோவின் கருத்தும் அவர்களது கிடையாது. சம்பளத்துக்கு தான் வேலை செய்து வந்துள்ளனர். எனவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். இதை கேட்ட நீதிபதி ரூ.5 ஆயிரம் பினை தொகை செலுத்த உத்தரவிட்டு இருவருக்கும் ஜாமீன் வழங்கினார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளையும் பிறப்பித்தார்.

Related Stories: