ஆசிரியர்களுக்கு விருது கிடையாது

சென்னை: ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர், அரசியல் தொடர்பில் இருந்தால், கண்டிப்பாக அவருக்கு ஆசிரியர் விருது வழங்கப்படமாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் பணியாற்றும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக விருதுக்கு தகுதியான சிறந்த ஆசிரியர்களின் பட்டியல்களை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் தாங்கள் ஆற்றியுள்ள பணிகள், எழுதிய புத்தகங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது என்றும், அப்படி விண்ணப்பித்தால் அவர்களுக்கு விருது வழங்கப்பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை தற்போது திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் என சுமார் 1000 ஆசிரியர்களுக்கு விருது கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: