தொடரும் பொதுமுடக்கம் சுற்றுலா வாகனங்களை இயக்குவோர் கடும் பாதிப்பு

சென்னை: தொடரும் பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலா வாகன ஓட்டிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது: தமிழகம் முழுவதும் சுற்றுலா வாகன தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது பொதுமுடக்கம் காரணமாக வருவாய் இல்லாததால், அவர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். சுற்றுலா வாகனங்களைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் அதிக வருமானம் ஈட்டித் தரக்கூடிய தொழிலாக உள்ளது. தினமும் ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும்.

இந்த காலத்தில் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதேபோல் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்தும் சுற்றுலா அனுப்பப்படுவது வழக்கம். இதனால் கோடை விடுமுறை காலத்தில் வருவாய் சற்று அதிகமாக கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா நோய்த் தொற்றால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கோடை விடுமுறையை தம்பி இருந்த வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் வருமானமின்றி பாதிப்பை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தங்களது வாகனங்களை பராமரிப்பு செய்வதற்கு கூட பணமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* சுற்றுலா தலங்களிலும் பாதிப்பு

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இங்கு, லட்சக்கணக்கான பொதுமக்கள் கோடைகாலங்களில் சுற்றுலா செல்வது வழக்கம். அப்போது அங்குள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள பொதுமுடக்கத்தின் காரணமாக, இங்கும் கடுமையான பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: