பொதுப் பணித்துறையில் தொடரும் பாதிப்பு கண்காணிப்பு பொறியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறைக்கு உதவியாக உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதற்காக, அந்த துறைகள் சார்பில் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் தினமும் பணிக்கு வர வேண்டியிருப்பதால், கொரோனாவால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்நிலையில், சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 10க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே, நீர்வளப்பிரிவு இணை தலைமை பொறியாளர் ஒருவர், சென்னை மண்டலத்தில் கண்காணிப்பு பொறியாளர் ஒருவர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் என 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பூண்டி நீரியல் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் வில்வநாதனுக்கு பாலாறு வட்ட கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட இருக்கிறது. அந்த மாவட்டங்களில் உள்ள பொறியாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அங்கு இப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சென்னை கட்டுமான மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் வேலூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு கூடுதல் பொறுப்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டதக்கது.

Related Stories: