50 சதவீதம் முடிந்த நிலையில் விடுதி கட்டிடத்தை இடிக்கும் பணி டெண்டர் ரத்து: பொதுப்பணித்துறையில் சர்ச்சை

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிதலமடைந்த விடுதி கட்டிடத்தை இடிக்கும் பணி 50 சதவீதம் முடிந்த நிலையில், திடீரென டெண்டர் ரத்து செய்து இருப்பது பொதுப்பணித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்கள் சி, டி, இ, எப், எச் மற்றும் 1 பிளாக் சிதலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இவற்றை இடித்து விட்டு அங்கு, உலக சுகாதார நிறுவனத்தின் நிதியை பெற்று புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, சிதலமடைந்த நிலையில் உள்ள மாணவர் விடுதியை இடிக்க, கடந்த ஜூன் 29ம் தேதி டெண்டர் விடப்பட்டது. இதில் ஒப்பந்தப்புள்ளி அதிகம் கோரிய நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்கப்பட்டது. இந்நிறுவனம் கடந்த ஜூலை 20ம் தேதி பணிகளை தொடங்கி 50 சதவீதத்துக்கும் மேல் கட்டிடங்களை இடித்துவிட்டது. இந்த நிலையில் திடீரென கடந்த ஜூலை 23ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் கட்டிடப்பிரிவு உதவி கோட்ட பொறியாளர் ஸ்டான்லி மருத்துவமனை வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறியும், கொரோனா காலம் முடியும் வரையில் இடிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார். அதிகாரிகள் கேட்ட கமிஷன் தொகையை ஒப்பந்த நிறுவனம் செட்டில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பணிகளை மேற்கொள்ள விடாமல் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமும் பணிகளை நிறுத்தி வைத்து விட்டதாக தெரிகிறது. இதனிடையே, கடந்த 29ம் தேதி மருத்துவ கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், கட்டிட இடிப்புக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மறு டெண்டர் விட கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு பரிந்துரை செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கமிஷன் தரவில்லை எனக்கூறி, ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வந்த பணிகளை நிறுத்தி வைத்து விட்டு டெண்டரை திடீரென ரத்து செய்து இருப்பது பொதுப்பணித்துறை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் கேட்ட கமிஷன் தொகையை ஒப்பந்த நிறுவனம் செட்டில் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணிகளை மேற்கொள்ள விடாமல் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

Related Stories: