வயது 77.. சிகிச்சை 22 நாட்கள்.. கொரோனாவில் இருந்து மீண்டார் அமிதாப் பச்சன்

சென்னை: தனது 77 வயதில், 22 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அமிதாப் பச்சன் வீடு திரும்பினார். இந்திய அளவில் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜூலை 11ம் தேதி மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அபிஷேக் பச்சன் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். பிறகு அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

ஏற்கனவே ‘கூலி’ என்ற இந்திப் பட ஷூட்டிங்கில் நடந்த விபத்து காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சன், 77 வயதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டனர். இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் மும்பையிலுள்ள வீட்டுக்கு திரும்பினார்.

பிறகு தனது டிவிட்டரில், ‘கொரோனா பரிசோதனை யில் நெகட்டிவ் என்று தெரிந்ததால் வீடு திரும்பிவிட்டேன்.

இங்கு தனிமையில் இருக்கிறேன். கடவுளின் கருணையாலும், பாபுஜியின் ஆசியாலும், நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும், மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினாலும் இந்த நாளை பார்க்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார். தனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அபிஷேக் பச்சன், கொரோ னாவில் இருந்து இன்னும் குணமடையாததால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: