புதிய கல்விக் கொள்கையால் சாதக, பாதகம் என்னென்ன?: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!!!

சென்னை: புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு  திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக்   கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல்   அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு  பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள், சட்டங்களை ஓசைப்படாமல் மத்திய அரசு  நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்   ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

புதிய கல்விமுறையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படவுள்ளது. விருப்ப மொழித் தேர்வாக இந்திய, அந்நிய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில்,மும்மொழிக் கொள்கையால் எதிர்காலத்தில் எங்கும்  இந்தி, எதிலும் இந்தி என்பதை நடைமுறைப்படுத்துவார்கள். அதனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இருமொழிக் கொள்கையே போதுமானது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை  கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, உயர்கல்வி படிப்புக்கு நுழைவுத்தேர்வு, M.Phil ரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதவும் வாய்ப்புகள் அதிக உள்ளது.

Related Stories: