திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணத்துக்கு முதல்வர் இரங்கல்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவு

சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததோடு, வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   ஜம்மு-காஷ்மீரில் இந்திய நாட்டின் எல்லை பாதுகாப்பு படையில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை, 173-வது படைப்பிரிவைச் சேர்ந்த ஹவில்தார் திருமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த 25ம்தேதி எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 31ம்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரம்  அடைந்தேன்.

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார் திருமூர்த்தி குடும்பத்திற்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், அமைச்சர் காமராஜ் மற்றும்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த எல்லை பாதுகாப்புப் படை திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான்  உத்தரவிட்டுள்ளேன்.

Related Stories: