சீசனுக்கு முன்பே வேட்டங்குடி சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில், சீசனுக்கு முன்பே வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சீனா, தென்ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். மார்ச் மாதத்தில் குஞ்சுகளுடன் தங்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்லும். கடந்த 2 மாதமாக தொடர் மழை பெய்து வருவதால், சரணாலயம் உள்ள கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

இதனால், சீசனுக்கு முன்பே குருட்டு கொக்கு, முக்குளிப்பான், வக்கா, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய வெண்கொக்கு, சிறிய வெண்கொக்கு, நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் பறவைகள் அதிகமாக வரவில்லை. வந்த பறவைகளும் தண்ணீர் இல்லாததால் திரும்பி சென்றன. வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால் சீசன் மாதங்களில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வர வாய்ப்புள்ளது. தற்போது சுமார் 3 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. கொரோனாவால் ஓர் ஊரிலிருந்து மற்ற ஊருக்கு செல்ல பொதுமக்கள் அஞ்சும் நிலையில், பறவைகள் நாடு விட்டு நாடு வந்து, இங்கு மகிழ்ச்சியாக திரிகின்றன.

Related Stories: