கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ரெக்கார்டிங் தியேட்டரின் பூட்டை உடைத்து இசை கருவிகள் திருட்டு: பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் மீது இளையராஜா பரபரப்பு புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது  வழக்கறிஞர் சரவணன் நேற்று  அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தி.நகர் முருகன் தெருவில் நான்  வசித்து வருகிறேன். கடந்த 1976ம் ஆண்டு முதல் 1,300 திரைப்படங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். கடந்த 45 ஆண்டுகளாக நான் சாலிகிராமம் அருணாச்சலம் தெருவில் அமைந்துள்ள  பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனி அறையில் சொந்தமாக இசை கருவிகளை வைத்து இசையமைத்து வருகிறேன்.  பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் எல்.வி.பிராசாத் எனக்கு தனியாக ஒரு அறையை ஒதுக்கி இசையமைக்க பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார். பின்னர், எல்.வி.பிரசாத் இறந்த பிறகு அவரது மகன் ராம் பிரசாத் ஸ்டுடியோவை பயன்படுத்த அனுமதி அளித்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் எல்.வி.பிரசாத் பேரன் சாய் பிரசாத், பிரசாத் ஸ்டுடியோவுக்கு நிர்வாக பொறுப்புக்கு வந்த பிறகு,  நான் பயன்படுத்தி வந்த அறையின் மின்சாரம், தண்ணீர் இணைப்பு உள்ளிட்டவற்றை துண்டித்துவிட்டார்.  மேலும், எனது அறைக்கு அத்துமீறி சென்று விலை உயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்தினார். இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மேலும், சிட்டி சிவீல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது அந்த வழக்கு  நடந்து வருகிறது.  

இதற்கிடையே கொரோனா ஊரங்கை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரான  சாய் பிரசாத், ஸ்டுடியோ அறையின் சாவி என்னிடம் இருக்கும் நிலையில், அத்து மீறி எனது அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த விலை உயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்தியும், இசை கருவிகளை திருடி கள்ளச்சந்தையில் விற்றதும் தெரியவந்துள்ளது.  அதோடு மட்டுமில்லாமல் நான் கைப்பட எழுதிய விலை மதிப்பில்லா இசை குறிப்புகளையும் திருடி சென்றுவிட்டார். எனவே, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது உரிய நடவடிக்கை எடுத்து, திருடிச் சென்ற விலை மதிப்பில்லா இசை குறிப்புகள் மற்றும் இசை கருவிகளை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: