டெல்லி: தங்க கடன் பத்திரத் திட்டம் 2020-21 வெளியீட்டு விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தங்க கடன் பத்திரங்கள் 2020-21 ஆகஸ்டு மாதம் 3 முதல் 7-ஆம் தேதி வரை திறந்திருக்கும். இதற்கான செட்டில்மென்ட் தேதி 11 ஆகஸ்டு 2020 ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தப் பத்திரத்தின் வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,334 ஆகும்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மின்னணு முறை மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு 50 ரூபாய் தள்ளுபடி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் முதலீட்டாளர்களுக்கு வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு ரூ 5,284 ஆகும்.
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
