பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் அவலம்

நெய்வேலி: குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 40,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குறிஞ்சிப்பாடியில் உள்ள பல்வேறு தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாய்கள், சாக்கடை கால்வாய்களில் உள்ள அடைப்பை நீக்குவது மற்றும் கொரோனா பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள ஆதிவராகசெட்டி தெருவில் தூய்மைப் பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சாக்கடைகளை தூர்வாரியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 குறிப்பாக இச்சாலை வழியாக பல்வேறு கடை வீதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பாதசாரிகள் உள்ளிட்டோர் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தூய்மை பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணி செய்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் குறிஞ்சிப்பாடியில் உள்ள பல்வேறு வார்டுகளில் அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றோம். அரசு சார்பில் வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களான முகக்கவசம், கையுறை, கால் பூட்ஸ் உள்ளிட்டவற்றை குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அதிகாரிகள் தங்களுக்கு வழங்குவதில்லை.  

 நாங்கள் பல சாலைகளில் தேங்கி உள்ள கழிவுகளை எந்த விதமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் அகற்றி வருகிறோம். இதுகுறித்து பேருராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து துய்மை பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டு தங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories: