கணிதமேதை சகுந்தலா தேவிக்கு சான்றிதழ் வழங்கியது கின்னஸ்: 40 ஆண்டுக்கு முன் செய்த சாதனை

புதுடெல்லி: கணிதமேதை சகுந்தலா தேவியின் சாதனையை ஏற்றுக்கொண்ட கின்னஸ் நிறுவனம், அவருக்கு கின்னஸ் சாதனை விருது கொடுத்து கவுரவித்துள்ளது. லண்டன் இப்பீரியல் கல்லூரியில் கடந்த 1980ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி நடந்த கணித போட்டியில், ஒரு பெண்ணிடம் இரண்டு 13 இலக்க எண்களை (7,686,369,774,870 × 2,465,099,745,779) கொடுத்து பெருக்கச் சொன்னார்கள். அந்த பெண் வெறும் 28 விநாடிகளில் பெருக்கி, 18,947,668,177,995,426,462,773,730 என விடை அளித்து வியக்க வைத்தார்.

அந்த சாதனைப் பெண்மணி, மனித கப்யூட்டர் என அனைவராலும் புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவிதான். இந்த சாதனைக்காக, ‘மிக அதிவேகமாக கணக்கிடும் மனிதன்’ என்ற விருதை கின்னஸ் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழை 40 ஆண்டுகளுக்குப் பிறகு சகுந்தலா தேவியின் மகள் அனுபமா பானர்ஜியிடம் நேற்று அது வழங்கியது. சகுந்தலா தேவியின் சாதனை கடந்த 1982ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. தற்போது, அமேசான் பிரைமில் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாக உள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருதுக்கான சான்றிதழ் அவரது மகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: