மாவட்டங்களில் மின்னல் வேகமெடுத்த கொரோனா சொந்த ஊரில் தஞ்சம் புகுந்த 5.50 லட்சம் பேர் சென்னைக்கு திரும்ப விண்ணப்பம்

* இ-பாஸ் கிடைக்காததால் வேலைக்கு வர முடியாமல் தவிப்பு

* சிறு கடைகளை மூடியவர்கள் திறக்க முடியாமல் அவதி

சென்னை: மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகமெடுத்து வரும் நிலையில், சொந்த ஊரில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப முயற்சி எடுத்து வருகின்றனர். ஐந்தரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அனுமதி கிடைக்காததால் பலர் வேலைக்கு வர முடியாமலும், தங்களின் சிறிய பெட்டிக் கடைகள், சிறு மளிகைக் கடைகளை மீண்டும் திறக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உச்சத்தில் இருந்த சென்னையில் தற்போது பாதிப்பு என்பது குறையத் தொடங்கியுள்ளது. இங்கு மின்னல் வேகத்தில் பரவியதால் உயிர் பயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றனர்.  

சென்னையில் இருந்து திரும்பியவர்களை சொந்த ஊரில் உறவினர்களே கண்டு கொள்ளாத நிலை தான் இருந்தது. சொந்த ஊர்களில் மட்டுமல்ல வேறு எந்த மாவட்டங்களுக்கு அவசர பணிக்கு சென்றால் கூட சென்னையில் இருந்து வந்தவர் என்றாலே பல அடி தூரத்திலே அவரை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இது சென்னைவாசிகளுக்கு பல்வேறு மன உளைச்சல்களை தந்தது. இந்நிலையில், சென்னையின் பாதிப்பை  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பலனாக தினமும் 4ஆயிரம் வரை இருந்த பாதிப்பு தற்போது  ஆயிரம் முதல் ஆயிரத்து 500 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது வேகமெடுக்க தொடங்கியது. பிற மாவட்டங்கள் கட்டுப்பாடாக இருந்தாலும், தற்போது ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு என்பது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு என்பது தீயாக பரவத் தொடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது சென்னையில் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் அன்றாட பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். பல்வேறு தனியார் நிறுவனங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கியுள்ளன. அதபோன்று பெரிய வணிக நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. இப்படியாக சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாலும், கொரோனா பாதிப்பு என்பது குறையத் தொடங்கியுள்ளதாலும், சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு வர முடிவு செய்துள்ளனர்.

இதற்காக இ- பாஸ் கோரி மக்கள் விண்ணப்பிக்க தொடங்கி உள்ளனர். சென்னைக்கு மீண்டும் வர வேண்டும் என்று ஏறத்தாழ ஐந்தரை லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சென்னையில் மீண்டும் பரவினால் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை கருத்தில் கொண்டு, கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, மரணம், திருமணம், அவசர மருத்துவம்  ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதில் பெரும்பாலானோர் பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல நிறுவனங்கள் செயல்பட தொடங்கிவிட்டதால் வீட்டில் இருந்து பணியாற்றிய ஊழியர்களை பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். இதனால் அவர்கள் இ-பாஸ் பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சிலர் பெட்டிக் கடை, சிறிய மளிகை கடை, சிறிய சலூன்களை சொந்தமாக நடத்தி வந்தனர். அவர்களும் கடைகளை திறக்க முடியாமல் வேறு மாவட்டங்களில் சிக்கி தவிக்கின்றனர்.

எனவே இந்த ஐந்தரை லட்சம் விண்ணப்பங்களில் கடந்த 23ம்தேதி வரை 1,61,764 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதியுள்ள விண்ணப்பங்களை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களின் இ-பாஸ் விண்ணப்பம் மறுக்கப்பட்டுவிட்டது. சென்னைக்கு இப்படி லட்சக்கணக்கில் மக்கள் வர விண்ணப்பித்து இருப்பதால், சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் தொடர்பான நடவடிக்கையை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும் என்பது சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரம் பணிக்கு திரும்ப முடியாமல் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களில் பரிதவித்து வருகின்றனர் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: