இந்திய நிதியுதவியில் கட்டப்பட்ட மொரீசியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடம் திறப்பு; பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த மொரீசியஸ் பிரதமர்!!

டெல்லி : மொரீசியஸ் நாட்டின் புதிய உச்சநீதிமன்ற கட்டிடத்தை அந்நாட்டு பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத் அவர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் மொரீசியஸ் நாடுகளின் நீதித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொரீசியஸ் தலைநகர் போர்ட் லூயிஸ் நகரில் இந்திய அரசின் நிதியுதவி மற்றும் உட்கட்டமைப்பு திட்ட நடைமுறைகளுடன் உச்சநீதிமன்றம் கட்டப்பட்டுள்ளது. மொரீசியஸ் நாட்டிற்கு கடந்த 2016ம் ஆண்டு இந்தியா அளித்த சிறப்பு பொருளாதார திட்டமான 353 மில்லியன் டாலர் மூலம் அந்நாட்டில் உச்சநீதிமன்ற கட்டிடம் உட்பட 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அந்த வகையில் அந்நாட்டு உச்சநீதிமன்ற கட்டிடம் குறிப்பிட்ட கால கட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 25,000 சதுர மீட்டரிலான இடத்தில் 4,700 மீட்டர் பரப்பளவில் 10 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.  அதிநவீன வடிவமைப்பில், வெளிப்புற வெப்பம் மற்றும் ஒலி ஊடுருவாமல், எரிசக்தி சிக்கனம் உள்ளிட்ட பசுமை அம்சங்களுடன் இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டடத்தில், மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தின் அனைத்துப் பிரிவுகள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமைவதால், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய உச்சநீதிமன்ற கட்டிடத்தை டெல்லியில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் மொரீசியஸ் பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத் அவர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மொரீசியஸ் பிரதமர் பிரவீந்த் ஜுக்நாத்,மொரீஷியஸ் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான காலங்களில் உங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும் நமது ஒற்றுமையை தெளிவுப்படுத்த இதனை நல்வாய்ப்பாக நான் பயன்படுத்திக் கொள்கிறேன், என்றார்.  

Related Stories: