உதவியாளருக்கு கொரோனா எதிரொலி தமிழக கவர்னர் பன்வாரிலால் 7 நாள் தனிமைப்படுத்தி கொண்டார்

சென்னை: தமிழக கவர்னரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் 7 நாள் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வரு கின்றனர். இந்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமசுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் இருவரும் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கவர்னர் மாளிகை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 38 பேருக்கு ஏற்கனவே கொரோனா அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கொரோனா பரிசோதனை முடிவில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, ஆளுநர் மாளிகை மருத்துவ அதிகாரி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா பரிசோதனை செய்தார். அதன்படி, முன்னெச்சரிக்கையாக கவர்னரை 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் தமிழக கவர்னர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

Related Stories: