பயிர் காப்பீடு செய்ய 24 மணி நேரமும் இ-சேவை மையங்கள் செயல்படும்: திருவள்ளூர் கலெக்டர் தகவல்

திருவள்ளூர்:விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்பதால், அனைத்து இ-சேவை மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில்  காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் - சொர்ணவாரி பருவ நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி தேதி 31.07.2020 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விவசாயிகள் பிரிமியம் செலுத்துவதற்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடன்பெறா விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பயிர் செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பில் 50 சதவீதம் பரப்பிற்கு பயிர்காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் எவ்வித சிரமமன்றி நாளை 31.07.2020க்குள் பயிர்காப்பீடு பிரீமியம் செலுத்தவும், பிரீமியம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யவும், திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை மையங்களும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன்படி, நாளை 31.07.2020 வரை 24 மணி நேரமும் திறந்து செயல்பட உத்தரவிடப்படுகிறது.கொரோனா பரவுதலை தடுத்திடும் பொருட்டு அனைத்து இ பொது சேவை மைய நிர்வாகிகளும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொண்டு இ-சேவை மையம் இயக்கிட உத்தரவிடப்படுகிறது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பிரிமியம் தொகையினை செலுத்தி இத்திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: