இன்னும் 9 மி.மீ. மழை பெய்தால் போதும் 200 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றை மீனம்பாக்கம் படைக்கும் : தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: இன்னும் 9 மி.மீ. மழை பெய்தால் போதும் 200 ஆண்டுகளில் இல்லாத வரலாற்றை மீனம்பாக்கம் படைக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இம்மாத தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் பல இடங்களில் மேகமூட்டத்துடன் காட்சியளித்தாலும், ஏதாவது ஒரே ஒரு பகுதியில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், குரோம்பேட்டை, பூந்தமல்லி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டியது. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் பரவலாகவே இந்த மழை பெய்து இருந்தது. இன்னும் 2 நாட்களுக்கு சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறுகையில்,தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் அருகே உள்ளதால் பருவகாற்றை மறுபக்கத்தில் இருந்து இழுக்கிறது. இதனால் கேரளா, வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும்.குறிப்பாக இடுக்கி, வால்பாறை, வயநாடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் கனமழை முதல் மிக மிக அதிகமான கனமழை கொட்டி தீர்க்கும். மீனம்பாக்கத்தில் இந்த ஜூலை மாதத்தில் இதுவரை 291 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் 9 மி.மீ. மழை பெய்துவிட்டால் போதும். 300 மி.மீ. ஆகிவிடும். இதனால் ஜூலை மாதத்தில் 200 ஆண்டுகளில் முதல்முறையாக 300 மி.மீ. மழை பொழிவை என்ற புதிய வரலாறு படைக்கலாம்.சென்னையில் கடந்த 1818ம் ஆண்டு ஜூலை மாதம் 299 மி.மீ மழை பெய்தது.

Related Stories: