கொரோனா ஊரடங்கால் ரூ.1000 கோடி இழப்பு...! பழனி கோவில் சந்தை வியாபாரிகள் வேதனை!!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவால் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழனி கோவிலுக்கு பக்தர்கள் வராததால் வெறிசோடி காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் சுமார் 4 மாத காலமாக பக்தர்கள் வராததால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாது கோவில் பகுதியை சுற்றி அதிகளவில் தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனவே சுற்றுலா பயணிகளும் வராததால் வாழ்வாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர். மேலும், கோவில் மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுமார் 2 ஆயிரம் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வர்த்தகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 அதாவது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இனி ஊரடங்கை நீட்டித்தால், வர்த்தகர்களின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, பேருந்து நிலைய சந்தையில், தங்களுக்கு கடைகள் முன்பு போல் வழங்க வேண்டும் என கூறி சந்தை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், மாநகராட்சி ஆணையர் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், குத்தகை எடுத்தவர்களுக்கு சந்தையில் கடை வழங்கப்படும் என கூறியதை தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: