பைப்லைன் உடைப்பை சீரமைக்காததால் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்: தொற்றுநோய் பீதியில் பொதுமக்கள்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலம், 70வது வார்டுக்கு உட்பட்ட பெரம்பூர் நெல்வயல் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கோவிந்தசுவாமி தெரு, சீனிவாசன் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, செய்யூர் பார்த்தசாரதி தெரு, மேல்பட்டி பொன்னப்பன் தெருவின் ஒரு பகுதி உள்ளிட்ட இடங்களில், பைப்லைனில் உடைப்பு காரணமாக கடந்த 6 மாதமாக அவ்வப்போது, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். அதுபோன்ற நேரங்களில் தற்காலிகமாக பள்ளம் தோண்டி பைப்லைனை சீரமைப்பதும், ஓரிரு தினங்களில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதி முழுவதும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து பைப்லைனையும் புதிதாக மாற்றப்பட்டது. அப்போது, மீண்டும் இதுபோன்று பிரச்னை ஏற்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் கடந்த ஆறு மாதமாக அடிக்கடி குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை இந்த பகுதி பொறியாளருக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் லாரிகளில் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் செலவு செய்ய வேண்டியுள்ளது. எப்போதெல்லாம் நாங்கள் புகார் செய்கிறோமோ அப்போது, ஏதாவது ஒரு தெருவில் பள்ளம் தோண்டிவிட்டு 10 அல்லது 20 நாட்கள் வேலை நடக்கிறது என கூறிவிட்டு மீண்டும் பள்ளத்தை  மூடி செல்வார்கள். ஆனால், அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வர தொடங்கும். ஏற்கனவே, கொரோனா தொற்றால் மக்கள் பீதியுடன் வசிக்கும் நிலையில், தற்போது டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சல் பரவி வருவதால், இப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: