போலீசாரை கண்டித்து தலித் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் மணிமேகலை (21). இவர் கடந்த மாதம் தன்னை தாழவேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் காதலித்து ஏமாற்றியதாக கூறி அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், காதலித்து ஏமாற்றியவர் மீது பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் புகார் செய்தால், போலீசார் கொச்சைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதால் தான் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் காவல்துறையை கண்டித்து கடந்த சில் நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நேற்று திருத்தணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தலித் மக்கள் முன்னணி, புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட தலித் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காதலித்து ஏமாற்றிய ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் எனஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: