தொடர் மழையால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

தர்மபுரி: தர்மபுரியில் பெய்த தொடர் மழையின் காரணமாக, சின்னவெங்காயம் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தர்மபுரி  மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், கடத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில், சின்ன வெங்காயத்தை 10ஆயிரத்திற்கும்  மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். நடப்பாண்டு அன்னசாகரம்,  எர்ரப்பட்டி, வெங்கட்டம்பட்டி, தம்மணம்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி,  குழியனூர், இண்டூர், அதகபாடி உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சின்னவெங்காயம்  பயிரிடப்பட்டுள்ளது. அதகபாடி அருகே, கடந்த  வைகாசி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட சின்ன வெங்காயம், நேற்று அறுவடை செய்யப்பட்டு,  விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக சின்னவெங்காயத்தை தரம்பிரித்து மூட்டை கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

 இது  குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வைகாசி பட்டத்தில் ஒரு ஏக்கரில் சின்ன  வெங்காயம் பயிரிட்டிருந்தோம். நடப்பாண்டில் அறுவடையின் போது, தென்மேற்கு  பருவமழை பரவலாக பெய்தது. இதனால் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி வெங்காயம்  அழுகிவிட்டது. இதனால் நடப்பாண்டில் ஒரு ஏக்கருக்கு 8டன் மட்டுமே மகசூல்  கிடைத்தது. சுமார் ஒரு டன் வரை வெங்காயம் மழையின் காரணமாக அழுகிவிட்டது.  ஒரு கிலோ ₹28வரை கொள்முதல் செய்தாலும் கூட, சின்னவெங்காயம் பயிரிட்ட  விவசாயிகளுக்கு நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: