லடாக் விவகாரத்தால் அரசியல் வாழ்வே அழிந்தாலும் பொய் சொல்ல மாட்டேன்: ராகுல் ஆவேசம்

புதுடெல்லி: ‘‘என் அரசியல் வாழ்வே அழிந்து போனாலும் லடாக்கில் சீன ராணுவம் ஆக்கிரமிக்கவில்லை என பொய் சொல்ல மாட்டேன்’’ என ராகுல் காந்தி ஆவேசமாக கூறியுள்ளார். சீன விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். “ சீனா குறித்த கடுமையான கேள்விகள் “ என்ற தலைப்பில் நான்காவது வீடியோவை ராகுல் வெளியிட்டுள்ளார்.  இது குறித்து, தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

சீனா, இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. உண்மையை மறைப்பது மற்றும் சீனா ஆக்கிரமிக்க அனுமதித்தது தேசதுரோகமாகும். இதனை மக்கள் அறிந்துகொள்ளும்படி வெளியே கொண்டுவருவது தேசபக்தியாகும். நமது பிராந்தியத்தில் சீனா நுழைந்துள்ளது என்பது செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சீனா பிராந்தியத்திற்குள் நுழையவில்லை என்று நிச்சயமாக நான் பொய் சொல்ல மாட்டேன். சீனா, இந்திய பிராந்தியத்தில் நுழையவில்லை என்று பொய் சொல்லும் நபர்கள், தேசபக்தி அற்றவர்கள் என நான் நினைக்கிறேன். எனக்கு இது அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அது குறித்து நான் கவலையடையவில்லை. உண்மையை மட்டுமே பேசுவேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* 2019ம் ஆண்டிலேயே அஸ்தமித்து விட்டது

ராகுல் கருத்துக்கு பதிலளித்த பாஜ செய்தி தொடர்பாளர் நரசிம்மா ராவ் நேற்று தனது பேட்டியில், ‘‘ராகுல் தனது தவறை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் தாக்குதலின் போது நமது வீரர்களை அவமதித்த அவர் மீண்டும் நம் வீரர்களை அவமதிக்கிறார். ஏற்கனவே நம் வீரர்களை அவமதித்ததால்தான் கடந்த 2019ம் ஆண்டிலேயே அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது’’ என்றார்.

Related Stories: