கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!!

கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் மேலும் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 18 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியின் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் குமார் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, அவருக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 19 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக-வை சேர்ந்த அன்பழகன் எம்.எல்.ஏ. மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். தமிழக அமைச்சரவையில் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு, நிலோபர் கஃபீல் ஆகிய 4 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நிலோபர் கஃபீல் தவிர மற்ற 3 அமைச்சர்களும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல நலத்திட்ட உதவிகள், நிவாரண பணிகள் என களத்தில் உள்ள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏவான ராஜேஷ் குமாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: