'இலவச மின்சாரத்தை பறிக்கக்கூடாது': மத்திய-மாநில அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!!!

ஈரோடு:  மத்திய அரசின் மின்திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கிராமங்கள் வாரியாக வீடுகள் மற்றும் விளைநிலங்களில் கருப்புகொடிகளை ஏற்றி விவசாயிகள் தங்களது கண்டனத்தை பதிவுசெய்துள்ளனர். சென்னிவளை அருகே பூச்சிக்காட்டுவலசு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் இணைந்து கருப்புகொடிகளை கையில் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே சோழதடம்புடையூர், கோவிந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், மின்மோட்டார்களுக்கு மாலை அணிவித்தும் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காலினாம்பாளையத்தில் விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதில், அக்கனபாளையம், அய்யம்பாளையம், அல்லாபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

மத்திய அரசின் மின் திருத்த மசோதா 2020ல் நிறைவேற்றப்படுமானால், இதுவரை தமிழகம் மற்றும் சில மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மேலும், மிகவும் நலிவுற்ற ஏழைகள், தாழ்த்தப்பட்டோரின் குடிசைகள், கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சாரமும் ரத்தாகும் நிலை உருவாகும். இதனால், இந்த திட்டத்தை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Related Stories: