கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் தர முடியாது சென்னை மக்களுக்கு ‘ஷாக்’ அளித்த ஆந்திரா: குடிநீர் தேவையை சமாளிப்பதில் சிக்கல்; தமிழக அரசு அதிர்ச்சி

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று ஆந்திர அரசு கைவிரித்து இருப்பது தமிழக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணா குடிநீரை பயன்படுத்தி வரும் சென்னை மக்களுக்கு இது பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு ஆந்திர அரசு வழங்க வேண்டும். குறிப்பாக ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் தர வேண்டும்.

கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கிய நிலையில் கண்டலேறு அணையில் இருந்து ஆத்திர அரசு தண்ணீர் திறக்கவில்லை. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ஆந்திர அரசு சார்பில் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு சார்பில் கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில், தெலுங்கு கங்கா திட்டப்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கியுள்ளது. ஆனால், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு முதல் தவணை காலத்தில் தர வேண்டிய 8 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆந்திரா அதிகாரிகள், கண்டலேறு அணையில் 20 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு தண்ணீர் தர வேண்டும். தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், போதிய மழை பெய்யாததால் நீர் இருப்பு உயரவில்லை.

எனவே, பருவமழை பெய்தால் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் 4.6 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இந்த நீரை கொண்டு அக்டோபர் வரை சமாளிக்க வேண்டியுள்ளது. ஆந்திர அரசின் இந்த திடீர் முடிவு சென்னை மக்களுக்கு பெரிய ஷாக்காக மாறி உள்ளது. எனினும் சென்னை குடிநீர் தேவைக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வழங்கவும், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பாசனத்துக்கு பயன்படாத ஏரிகளில் தண்ணீர் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: