மதுரை மக்களை தொடர்ந்து சோதிக்கும் கொரோனா: கள்ளழகர் கோவில் ஆடித் திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது...!!!

மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கொரோனா பரவல் எதிரொலியாக இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 4 பட்டர்களால் நடத்தப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க அழகர், மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு ‘வைகை ஆறு’ போல செயற்கையாக வடிவமைக்கப்பட்ட தாமரை தடாகத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆகம விதிப்படி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பூப்பல்லக்கு உற்சவத்துடன் மதுரையின் புகழ்மிக்க சித்திரை திருவிழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சி  www.tnhrce.gov.in என்ற இணையதள வாயிலாகவும், youtube temble live streaming மற்றும் கள்ளழகர் கோயில் முகநூல் மூலமாகவும் பொதுமக்களுக்கு ஒளிபரப்பானது.

இதனைபோல், அழகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவானது பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், விழாக்காலங்களில் பெருமாள், தினசரி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி, கோட்டை வாசல் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு கொரோனாவையொட்டி ஆடித்திருவிழாவானது பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூலை 20-ம் தேதி கோயில் வளாகத்தில் வைத்து, பக்தர்கள் இன்றி விழாக்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் திருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் நடத்தப்படுகிறது. கோவில் நிகழ்ச்சிகளை பக்தர்கள் காண காணொலி மூலம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: