தேனாம்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு குடிபோதையில் கார் ஓட்டி விபத்து தனியார் நிறுவன மேலாளர் கைது: மரத்தில் மோதியதில் கார் எரிந்து நாசம்

சென்னை: சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (30). அண்ணா சாலையில் உள்ள  தனியார் நிறுவனத்தின் மேலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு வார இறுதி நாள் என்பதால் மது அருந்திவிட்டு, காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். நள்ளிரவு என்பதால் அண்ணா சாலையில் வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் விக்னேஷ் போதையில் அசுர வேகத்தில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். தேனாம்பேட்டை சந்திப்பில் உள்ள செனடாப் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதி நின்றது. சொகுசு கார் என்பதால் விக்னேஷ் காயமின்றி தப்பினார். சிறிது நேரத்தில் தீப்பிடித்து கார் முழுவதும் மளமளவென எரிந்தது.

தகவலறிந்து தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் தீயை அனைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.  இதுகுறித்து தேனாம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விக்னேஷ் குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, அதிவேமாக கார் ஓட்டியது, போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்  போலீசார் வழக்குப்பதிவு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: