ஆன்லைன் வகுப்பு கட்டாயமாக்கப்பட்டதால் பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கி தந்த தந்தை: இமாச்சல் பிரதேச தொழிலாளிக்கு பாராட்டு

கங்க்ரா: இமாச்சல் பிரதேசத்தில் ஆன்லைன் வகுப்பு கட்டாயமாக்கப்பட்டதால், தன் குழந்தைகளின் தேவைக்காக பசுவை விற்று ஸ்மார்ட் போன் வாங்கி தந்த தந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர். கொரோனா நோய் தொற்றால் குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் முற்றிலும் கேள்விக் குறியாகியுள்ள நிலையில் சில மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகின்றன. ஆனால் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை படிக்க வைக்கும் ஏழை பெற்றோர்களுக்கு ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினி என்பது மிகவும் சவலான ஒன்றாக உள்ளது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள கங்க்ரா மாவட்டத்தில் உள்ள கும்மர் கிராமத்தை சேர்ந்தவர் குல்தீப் குமார்.

அவருடைய மகள் அனு மற்றும் மகன் வன்ஷ் முறையே நான்காம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் அரசு பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர். இலவசமாக கல்வி அளிக்கப்பட்டாலும் கூட இமாச்சல் மாநிலம் முழுவதும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குல்தீப் குமாருக்கு ஸ்மார்ட்போனும் இணையமும் எட்டமுடியாத இலக்காக இருந்திருக்கிறது. இருப்பினும் தங்களுக்கு வருமானம் அளித்து வரும் ஒற்றை பசுமாட்டை ரூ. 6000-க்கு விற்று ஸ்மார்ட்போன் ஒன்றை அவர்களது தந்தை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து குல்தீப் குமார் கூறுகையில், ‘என்னால் ஒரு ஸ்மார்ட்போன் கூட வாங்கி பிள்ளைகளுக்கு தர முடியவில்லையே என்ற எண்ணம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. அதனால், அவர்களின் படிப்புக்காக பசு மாட்டை விற்று ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தேன்’ என்றார். இந்த செய்தி சமூக ஊரடங்களில் வைரலானது. பலரும் குல்தீப்பிற்கு மனம் உவந்து பாராட்டுகளை தெரிவித்ததோடு உதவியும் செய்து வருகின்றனர். குல்தீப்புக்கு உதவும் நோக்கில் பாலிவுட் நடிகர் சோனு சூட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குல்தீப் குறித்த தகவல்களை பகிருமாறு கேட்டுக் கொண்டார். நிச்சயம் அவருக்கு அவருடைய பசு திரும்பிக் கிடைக்க வேண்டும் என பலரும் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.

Related Stories: