இறால் பண்ணையை அகற்ற கோரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை: கல்பாக்கம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே இறால் பண்ணையை அகற்றக்கோரி, பொதுமக்கள் கூவத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த பெருந்துறவு மீனவர் பகுதியில் சுமார் 150 மீன குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, 12க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும், பண்ணைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், இந்த பண்ணைகளை அகற்ற வேண்டும் என பெருந்துறவு மீனவ பகுதி மக்கள் நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையில், இறால் பண்ணை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில், பெருந்துறவு மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேரை கூவத்தூர் போலீசார் நேற்று காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதையறிந்ததும், மீனவ கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், கூவத்தூர் காவல் நிலையத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது, காவல் நிலையத்து அழைத்து சென்ற 6 பேரையும் விடுவிக்க வேண்டும். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, முறையான உரிமத்துடன் இறால் பண்ணைகள் இயங்குகிறதா என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார், 6 பேரையும் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: