படித்த இளைஞர்கள் குற்றங்களில் ஈடுபடுவதால் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

மதுரை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடுக்க உரிய சட்டம் இயற்ற வேண்டுமென ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அருகே விஜயபதியைச் சேர்ந்த சிலுவை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். கொரோனா விடுமுறையால் எனது சொந்த ஊரான விஜயபதியிலுள்ள நண்பர்களை சந்திப்பதற்காக ஜூன் 5ல் சென்றேன். அங்கு உள்ள ஒரு தோட்டத்தில் எனது நண்பர்கள் சீட்டு விளையாடிக் ெகாண்டிருந்தனர். அப்ேபாது ரோந்து வந்த கூடங்குளம் போலீசார் சீட்டுகளை பறிமுதல் செய்து நான் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நான் சீட்டு விளையாடவில்லை. எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சீட்டு விளையாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், ஆன்லைன் ரம்மி விளையாட்டை கண்டுகொள்வதில்லை. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு சமூக வலைத்தளங்களை சாதகமாக பயன்படுத்துகின்றனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை குறிவைத்தே இவை அரங்கேற்றப்படுகின்றன. உதவி ஐஜி தாக்கல் செய்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு பலர் அடிமையாகி உள்ளதாகவும்,

இவர்களது குடும்பம் பொருளாதார பிரச்னையை சந்தித்துள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. இதன்மூலம் பல்வேறு தற்கொலைகள் மற்றும் அந்த குடும்பத்தின் வறுமை போக்கப்பட்டுள்ளது.   தற்பொழுது ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி   சீட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள்  பணத்தை மையமாக வைத்து நடைபெறுகிறது. பணம் சூறையாடப்படுகிறது. இது வேலையில்லா இளைஞர்களின் நேரத்தையும் ,  அவர்களுடைய சிந்திக்கும் திறனையும் இது கெடுக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் இல்லையெனத் தெரிகிறது. இந்தியாவில் விளையாட்டுகளை முறைப்படுத்த வேண்டியுள்ளது.

பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த சிக்கிம், நாகலாந்து மற்றும் தெலங்கானா மாநிலங்கள் சட்டத்தை இயற்றியுள்ளன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது. இதனால், படித்த குற்றவாளிகள் உருவாவார்கள் என்பது ஆபத்தானது. கந்துவட்டி பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க கந்துவட்டி தடை சட்டம் ெகாண்டு வரப்பட்டது. படித்த இளைஞர்கள் பலர் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் கைதாவதே இதற்கு ஆதாரம். தற்போதைய ஆபத்தான சூழலை உணர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடுக்க உரிய சட்டத்தை இயற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: