சமூக இடைவெளி இல்லாமல் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: நோய் தொற்று தடுக்கவா, ஏற்படுத்தவா மக்கள் கேள்வி'

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள அனைத்து மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அந்தந்த மண்டலங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இவற்றை முறையாக நடத்தாததால் இந்த நிகழ்ச்சிகள் விளம்பர நோக்கத்துக்காக மட்டுமே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அந்த வகையில் சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், பேரணி என்ற பெயரில் அனைவரும் அணிவகுத்துச் சென்றனர். இதில் சிறிதும் சமூக இடைவெளியின்றி 50க்கும் மேற்பட்டோர் மொத்தமாக சென்றனர். மேலும் சில இடங்களில் மாநகராட்சி ஆணையர் தானே சென்று முகக்கவசங்களை பொதுமக்களுக்கு கொடுத்தார். அதை பெறவும் பொதுமக்கள் முண்டியடித்து வாங்கி சென்றனர்.

அதன் பிறகு சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி தன்னார்வ அமைப்பினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி திரண்டனர். இதனால் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே மாநகராட்சி ஆணையர் மைக்கில்  நாம் எதற்காக இந்த நிகழ்ச்சி செய்கிறோமோ அந்த சமூக இடைவெளி இந்த இடத்தில் இல்லை  எனக் கூறியதால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, சினிமா பாடல்களுக்கு ஆண்களும் பெண்களும் விழிப்புணர்வு என்ற பெயரில் குத்தாட்டம் போட்டனர்.

இதை காண்பதற்கும் அந்தபகுதியில் சுற்றி பொதுமக்கள் நின்றனர் இங்கும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் நின்றனர். அதிகாரிகளின் செயல்பாடு இப்படி இருக்க, மற்றொருபுறம் அமைச்சர்களின் செயல்பாடும் தற்போது சென்னையில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து அவர்களின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அந்தப் பணிகளை மேற்பார்வை என்ற பெயரில் அமைச்சர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி ஊடகங்களை சந்திக்கின்றனர்.

அந்த இடங்களில் எல்லாம் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். இதனால் சமூக இடைவெளி இல்லாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஒரு பேரிடர் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து ஒரு தெளிவான சிந்தனையுடன் அரசு செயல்பட்டால் மட்டுமே விழிப்புணர்வு என்ற பெயரில் தற்போது நடக்கும் கேலி கூத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related Stories: