மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்ததால் தண்ணீருக்கு வெளியே தெரியும் நந்தி சிலை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.67 அடியாக சரிந்ததால், தண்ணீரில் மூழ்கியிருந்த ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் நந்திசிலை நீருக்கு வெளியே தலைகாட்டுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது 60 சதுர மைல் பரப்பளவு, நீர்த்தேக்கப்பகுதியாக அளவீடு செய்யப்பட்டது. அப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்த மக்கள் வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளியேறும்போது வழிபாட்டு தலங்களை அப்படியே விட்டுச் சென்றனர். இவ்வாறு நீர்த்தேக்கப் பகுதியான பண்ணவாடி பரிசல்துறையில் பெரிய நந்திசிலையுடன் கூடிய ஜலகண்டேசுவரர் கோயில் மற்றும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயத்தையும் மக்கள் இடிக்காமல் விட்டுச் சென்றனர்.

சுண்ணாம்பு கலவையால் சுட்ட செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த வழிபாட்டு தலங்கள் ஆண்டுக்கணக்கில் தண்ணீரில் மூழ்கி கிடந்தாலும் சிதிலமடையாமல் காணப்பட்டது. ஆனால், நீர்மட்டம் சரியும் சமயங்களில் வெளியே தெரியும் இந்த வழிபாட்டு தலங்களை சிலர் அருகில் சென்று பார்த்து வருவது வழக்கம். அப்போது, நாச வேலையில் ஈடுபட்டதால் கிறிஸ்தவ இரட்டை கோபுரத்தில் ஒன்று சரிந்து விழுந்தது. நந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 அடிக்கு கீழே சரிந்தபோது நீருக்கு வெளியே கிறிஸ்தவ ஆலய கோபுரம் தெரிந்தது. நேற்று அணையின் நீர்மட்டம் 68.67 அடியாக சரிந்ததால் பண்ணவாடி நீர்த்தேக்கத்தில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் நுழைவாயில் பகுதியான நந்திசிலையின் தலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.  அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால் ஆலயம் முழுமையாக தெரியும். நந்தி சிலை தலை காட்டினால் அதனை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்வார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கால் பண்ணவாடி பரிசல்துறை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: