பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று லாரிகள் ஸ்டிரைக்

சேலம்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (22ம்தேதி) வேலை நிறுத்தப்போராட்டம் நடக்கிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து 12லட்சம் வாகனங்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் முருகன் வெங்கடாசலம் கூறியதாவது: டீசல் விலை உயர்வு, லாரி ஓடாத நாட்களுக்கு சாலை வரி வசூலிப்பு, பழைய வாகனங்களின் உரிமையை ரத்து செய்வது, காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, போலீசார் பொய் வழக்குகள் பதிந்து அபராதம் வசூலிப்பது போன்ற காரணங்களால், லாரி தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதை கண்டித்தும், லாரி ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பது, ஊரடங்கு காலத்திற்கான நிவாரணம்  வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (22ம்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிரைலர் உரிமையாளர்கள், துறைமுக டிரைவர் உரிமையாளர் சங்கங்கள், மணல் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. இதனால் மாநிலம் முழுவதும் 8 லட்சம் லாரிகள் உள்பட 12 லட்சம் வாகனங்கள் ஓடாது. இதனால் ரூ.10 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: