கந்தசஷ்டி குறித்து அவதூறு பதிவு விவகாரம் கருப்பர் கூட்டம் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அனுப்பியது

சென்னை:கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தியும், தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நடராஜன் புதுச்சேரி மாநில காவல்நிலையத்தில் சரணடைந்தார். மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஓட்டேரி சோமசுந்தரம், மறைமலைநகர் குகன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தி.நகர் நியூ போக் சாலையில் உள்ள கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தில்  சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அந்த யூடியூப் சேனல் நிறுவனத்தையும் மூடி சீல் வைத்தனர். இந்நிலையில், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்யும்படி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம் கருப்பர் கூட்டம் சேனலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் பொதுமக்களிடையே பதற்றத்தையும் மதமோதல்கள் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு ‘கருப்பர் கூட்டம் சேனலை’ முடக்க கடிதம் எழுதியுள்ளனர். அதன்படி ஓரிரு நாளில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories: