ஆடி அமாவாசை பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய திருப்புவனம் வைகை ஆறு

திருப்புவனம்: கொரோனா ஊரடங்கால் திருப்புவனம் வைகை ஆறு பக்தர்கள் கூட்டமின்றி, ஆடி அமாவாசை தினமான இன்று வெறிச்சோடி காணப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க இந்துக்கள் ஏராளமானோர் வருகை தருவதுண்டு. ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற தினங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வைகை ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு செல்வர்.

மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. கொரானோ வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் நிகழ்வு நடைபெறாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் ஒருசில பக்தர்கள் வைகை ஆற்றில் அமர்ந்து தர்ப்பணம், திதி கொடுத்து விட்டு புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். திதி, தர்ப்பணம் செய்யும் புரோகிதர்கள் யாரும் வைகை ஆற்றிற்கு வரவில்லை. போலீசார் வைகை ஆற்றிற்கு செல்லும் வழியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டம் இல்லாததால் திருப்புவனம் வைகையாறு வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: