சென்னை: தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 110க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 92,000 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு தோராயமாக சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இதேபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் 51 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் தொழில்நுட்ப கல்வித்துறையின் கல்வி பாடத்திட்டத்தில் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து 16,890 இடங்கள் உள்ளன. இதற்கு தோராயமாக 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, காலை, மாலை என சுழற்சி முறையில் (ஷிப்ட் அடிப்படையில்) வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. இதற்கிடையே, கொரோனா பரவல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் மாணவர்கள் விண்ணப்பங்களை நேரடியாக வாங்க அதிக அளவில் வருவார்கள் என்பதால் தமிழக அரசு அதன் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்ப விநியோக முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, இன்று முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோக முறை முதன்முறையாக தொடங்குகிறது. www.tngasa.in, www.tndceonline.org www.tngptc.in ஆகிய இணையதளங்களில் ஜூலை 31 ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சில தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர்களுக்கு நேரடி விண்ணப்பங்களை விநியோகம் செய்வதாக புகார் வந்தது. இதனையடுத்து, தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், இன்று முதல் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பங்களை வழங்க வேண்டும் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைபோல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவும் இன்று தொடங்குகிறது. பிஇ, பிடெக் சேர்க்கை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் 55 ஆயிரத்து 995 மாணவ மாணவியர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். இதில் 36 ஆயிரத்து 962 பேர் விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்தியுள்ளனர். ஆகஸ்ட் 16ம் தேதியுடன் விண்ணப்பம் பதிவு செய்வது முடிகிறது. “ பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையும், பகுதி நேர பிஇ, பிடெக், எம்பிஏ, எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கான கவுன்சலிங்கும் இணைய தளம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளை பொறுத்தவரையில் கடந்த 2015-2016ம் ஆண்டு முதல் 2019-2020 வரை பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கோவையில் உள்ள தொழில் நுட்பக் கல்லூரியில் நேரடி கவுன்சலிங் நடத்தப்பட்டு வந்தது.தற்போது பகுதி நேர படிப்புகளுக்கான கவுன்சலிங் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு மற்றும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், பிஇ, பிடெக் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கையும் இணைய தளம் மூலம் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பும், இணைய தள முகவரியும் பின்னர் அறிவிக்கப்படும். இது தவிர, எம்பிஏ, எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கையும் இணைய தளம் மூலம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனம் தெரிவித்திருந்தார்.