செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

பா.ஜீவசுந்தரி-37

நகைச்சுவையும் மனிதாபிமானமும் இணைந்த கலவை அங்கமுத்து

மிக மென்மையான மனப்பாங்கும் பெருத்த உடலும் மனிதாபிமானமும் கொண்ட அங்கமுத்து அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்த்திரையில்  நகைச்சுவைக் கொடியை ஓங்கி உயரப் பறக்க விட்டவர். சற்றும் அலட்டிக் கொள்ளாத  உடல்மொழி, அலட்சியமான குரல், மிக இயல்பான நடிப்பு  என்று தன்னை அடையாளம் காட்டியவர். நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் கதாநாயகிக்கு இணையான பாத்திரங்களையும் ஏற்று நடித்துப் பின்னர்  முழுவதும் நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு மாறி மெருகூட்டியவர். தமிழ்த் திரையுலகின் முதல் பெண் நகைச்சுவை நடிகை அங்கமுத்து என்றால் அது  கொஞ்சமும் மிகையல்ல.  

பிற்காலத்தில்தான் நகைச்சுவை நடிகை, கதாநாயகி, வில்லி என்று வகை பிரித்து அதற்கேற்றாற்போல் நடிக, நடிகையர் முத்திரை குத்தப்பட்டார்கள்.  ஆரம்ப கால நாடகங்களைப் பொறுத்தவரை நடிக, நடிகையர் அனைத்துப் பாடங்களையும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும். எந்த ஒரு தனி  நபரை நம்பியும் நாடகங்கள் இருந்ததில்லை. அப்படி நடத்திவிடவும் முடியாது. ராஜபார்ட், ஸ்திரீபார்ட், கள்ளபார்ட் என நடிகர்களுக்குத் தனித் தனி  அந்தஸ்து இருந்தபோதும், அனைவரும் அனைத்து வேடங்களையும் ஏற்றே நடித்து வந்திருக்கிறார்கள்.

நடிப்பு, பாட்டு, நடனம் என அனைத்தையும் ஒரு சேர கற்றுத் தேர்ந்தவர்களாக அக்கால நாடக நடிக, நடிகையர் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு  நடிப்புப் பயிற்சிக் கல்லூரிகளில் கூட அவ்வாறு பொறுப்பேற்று சொல்லித் தருவார்களா என்ற கேள்வி எழலாம். ஆனால், இரண்டையும்  ஒன்றையொன்று முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் சரியல்ல. கால மாற்றங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் மாறிக்கொண்டே  வந்திருக்கின்றன. அங்கமுத்துவும் நாடகங்களில் அப்படித்தான் அனைத்துப் பாத்திரங்களையும் ஏற்றிருக்கிறார்.

படிப்படியாக நாடகங்களிலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தபோதும் உடனடியாக நகைச்சுவை நடிகை என்ற தனித்த முத்திரையை அவர் பெற்றிருப்பாரா  என்பதும், அவருக்கு முன்னர் திரையில் பெண்கள் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்களா என்ற கேள்விகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு தொடர்ந்து 50  ஆண்டுகளில் 500 படங்களுக்கு மேல் நடித்தவர். சிறு சிறு கதாபாத்திரங்கள் என்று எதையும் விலக்கி விடாமல் எல்லா வேடங்களையும் ஏற்று  நடித்தவர். பேசும் படங்கள் வருவதற்கு முன்பான மௌனப் படக் காலத்திலேயே திரையில் தோன்றி நடிக்கத் தொடங்கியவர்.

தமிழ்த் திரை கண்ட மகத்தான நகைச்சுவைப் பட்டாளம்

தமிழ்த்திரை கண்ட நகைச்சுவை நடிகர்களைப் போல் வேறு எந்த மொழியிலும் எண்ணிக்கையில் இவ்வளவு கலைஞர்களைப் பார்ப்பது அரிது.  நகைச்சுவை நடிக நடிகையர் என்றாலே அவர்கள் நடிப்பு என்பதையும் தாண்டி தங்கள் உருவ அமைப்பினால் சிரிக்க வைப்பவர்களாகவும், கோணங்கித்  தனமான உடல் சேட்டைகளாலும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்கள். நம் நகைச்சுவை நடிகர்கள் பலரும் அதற்கு உதாரணம். ‘உருவு கண்டு எள்ளாமை  வேண்டும்’ என்ற வள்ளுவரின் குறளிலிருந்து மாறுபட்டுத்தான் இங்கு நகைச்சுவை இன்று வரை கோலோச்சி வருகிறது.

உயரம் குறைந்த அந்தக் கால பி.டி.சம்பந்தம் முதல் ‘தவக்களை’ சிட்டிபாபு வரை, எலும்புக்கூடு போன்ற மெலிந்த தோற்றத்தாலேயே பார்த்ததும் சிரிக்க  வைத்த ‘ஃபிரண்ட்’ ராமசாமி, சாயிராம், ‘தயிர்வடை’ தேசிகன் இவர்களில் ஆரம்பித்து நாகேஷ், வடிவேலு, சார்லி பின்னர் வந்த ‘ஓமக்குச்சி’ நரசிம்மன்,  பாலாஜி, முத்துக்காளை வரையிலும், பருத்த உடல் மூலம் பார்வையிலேயே கிச்சுக்கிச்சு மூட்டி சிரிக்க வைத்த ‘புளிமூட்டை’ ராமசாமி, அங்கமுத்து,  ‘குண்டு’ கருப்பையா, ‘பகோடா’ காதர், பிந்து கோஷ், சமீப கால சகாதேவன் மகாதேவன் இரட்டையர் வரை… தங்கள் கருத்த தோலின் மூலம்  பிரபலமான ‘கருப்பு’ சுப்பையா முதல் கருணாஸ் வரையிலும் மக்களைக் கவலை மறந்து சிரிக்க வைத்த நகைச்சுவையாளர்களை அதிகம்  கொண்டிருந்த பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டு.

இதனால் உருவக் குறைபாட்டால் அவர்கள் அனைவரும் நடிப்புத் திறனற்றவர்களோ, திறமை குறைந்தவர்களோ அல்ல. ஒவ்வொருவருமே மிகச்  சிறந்த நடிப்பையும் தங்களுக்கென்று தனித்த உடல்மொழியையும் கொண்டவர்கள். இதில் சோகம் என்னவென்றால், ரசிகர்களை மகிழ்விப்பதற்காகத்  தங்கள் உடல் பருமன் போன்ற குறைகளை அவர்கள் நிவர்த்தி செய்து கொள்ளவேயில்லை. அதுவே அவர்களின் மூலதனமாக இருந்ததைப் போலவே  பின்னர் பெரும் தண்டனையாகவும் மாறியது. அங்கமுத்துவின் உடல் பருமன் என்பது பிற்காலத்தில் அவருக்கு ஏற்பட்ட குறைபாடு.

இதற்கு சரியான நம் காலத்து உதாரணம் நடிகை பிந்துகோஷ். குழந்தை நட்சத்திரமாகக் கமலுடன் ‘களத்தூர் கண்ணம்மா’ தொடங்கி பின் குழு நடனப்  பெண்களில் ஒருவராகப் பல படங்களில் ஆடி மகிழ்வித்த அவர், பிற்காலத்தில் நடனமாட முடியாமலும், பழகிய திரைத்துறையை விட்டு விலக   முடியாமலும் தவித்து, சில கால இடைவெளிக்குப் பின் நகைச்சுவை நடிகையாகக் ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் ‘மீண்டும் புதுமுகமாக’  அறிமுகமானார்.

நாட்டியக்கலை பெற்றுத் தந்த நாடக வாய்ப்பு

1914-ல் நாகப்பட்டினத்தில் எத்திராஜுலு நாயுடு  ஜீவரத்தினம் தம்பதியரின் மகளாகப் பிறந்த அங்கமுத்து மிகச் சிறு வயதிலேயே பாரம்பரிய  நடனக்கலையை முறையாகப் பயின்று அரங்கேற்றம் செய்தவர். பெற்றோருக்கு ஒரே பெண்ணான அங்கமுத்து ஐந்து வயதானபோது குடும்பம்  மதராஸில் குடியேறியது. சௌகார்பேட்டை பகுதியிலுள்ள பைராகி பள்ளியில் படிப்பு. இரண்டாண்டுகளில் தந்தையின் மரணம் குடும்பத்தைப் புரட்டிப்  போட்டது. இளம் வயதிலேயே தந்தையை இழந்ததாலும் குடும்பச்சூழல், வறுமை எல்லாமும் சேர்ந்து ஏழாம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு  முற்றுப்புள்ளி வைத்தது. தாயும், மகளும் பிழைக்க வழி தேட வேண்டிய நிலைமை. அப்போது மகளிடம் இருந்த ஒரே திறமை நடனமாடுவது மட்டுமே.

அந்நாளில் ஜெயிக்க அதுவே போதுமான தகுதி. கலையார்வம் கொண்டவர்களின் ஒரே புகலிடமாக இருந்தவை அன்றைய பாய்ஸ் நாடகக்  கம்பெனிகள்; அவை அங்கமுத்துவுக்கும் அடைக்கலம் அளித்தன. தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளில் முதல்வர் பி.எஸ்.வேலு நாயர், 1934 இல்  வெளியான ‘சாகுந்தலம்’ படத்தின் கதாநாயகன். அக் காலத்தில் இவர் ராஜபார்ட் வேடமேற்று நடித்த நாடகங்களைப் பார்ப்பதற்காக, நீண்ட தொலைவில்  இருந்தெல்லாம் மக்கள் நடந்தே வந்துள்ளனர். வண்டி கட்டிக் கொண்டு பயணித்து வந்தவர்களும் ஏராளம் உண்டு. வேலு நாயரின் நாடகக்குழு  நாகப்பட்டினத்துக்கு வந்தபோது பத்து வயதேயான சிறுமி அங்கமுத்து அவரது குழுவில் சேர்ந்தார்.

அயல்நாட்டுப் பயணங்களும் திரையுலக அறிமுகமும்

பி.எஸ்.வேலு நாயர் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட அங்கமுத்து அங்கிருந்து தஞ்சாவூர் கோவிந்தன் நாடகக் கம்பெனிக்கு மாறுகிறார். அங்கு  கள்ளபார்ட் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பையும் விட்டு விடவில்லை. பொதுவாக கள்ளபார்ட், ராஜபார்ட் வேடங்களை ஆண்கள் ஏற்பதுதான் வழக்கம்.  அதன் அடுத்தபடியாக ரெங்கசாமி நாயுடு கம்பெனியில் வாய்ப்பு கிடைக்க அதில் பங்கேற்று நடிப்பதன் மூலம் மலேசியப் பயணம் செய்யும் வாய்ப்பும்,  அயல் நாடுகளிலும் நாடகம் நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்தடுத்த கம்பெனிகளில் பங்கேற்றதால் நடிப்பில் அனுபவமும் முதிர்ச்சியும்  பெற்று முன்னேற்றமும் அடைகிறார்.

சில ஆண்டுகளிலேயே பி.எஸ்.ரத்னாபாய், பி.எஸ்.சரஸ்வதிபாய் சகோதரிகள் நடத்தி வந்த நாடகக் கம்பெனியில் இணைகிறார். அக்காலத்தில் பெண்கள்  நாடகக்குழு நடத்துவதும், பெண்கள் மட்டுமே அக்குழுவில் அனைத்து வேடங்களையும் ஏற்பதும் நடைமுறைக்கு வந்திருந்தது. அத்துடன் ஸ்பெஷல்  நாடகங்களில் நடிக்கும் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜ பாகவதர் போன்ற புகழ் மிக்க நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து  நடித்ததன் மூலம் அங்கமுத்துவும் புகழ் பெற்ற நாடக நடிகையாகிறார். நாடகங்களில் மட்டுமல்லாமல் அப்போது தமிழ்நாட்டு மக்களைக் கவர்ந்து  கிறுக்குப் பிடிக்க வைத்த ‘மாயாஜாலமான’ பயாஸ்கோப் என்று மக்களால் அழைக்கப்பட்ட பேசாப் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

மௌனப்பட யுகத்தின் ஜாம்பவானாகத் திகழ்ந்த தயாரிப்பாளர் ஏ. நாராயணன் தயாரித்த பல படங்களில் அங்கமுத்துவின் பங்களிப்பும் இருந்தது.  மௌனப் படங்கள் பேச ஆரம்பித்த காலத்தில் அங்கமுத்து பிற கலைஞர்களை முந்திக்கொண்டார். 1933 இல் வெளிவந்த ‘நந்தனார்’ அங்கமுத்துவின்  அறிமுகப் படமாகும். நியூ சினிமா நிறுவனம் தயாரித்த படம் அது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளிவந்த ‘மிஸ் சுந்தரி’யில் கதாநாயகிக்கு  இணையான வேடம்.

நாடக உலகில் சொந்த கம்பெனி வைத்து நடத்திய சகோதரிகளான பி.எஸ்.ரத்னாபாய்,  பி.எஸ்.சரஸ்வதிபாய் இருவரும் இணைந்து திரைப்படம்  தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கினர். 1934ல் வெளியான ‘பாமா விஜயம்’ அவர்கள் தயாரிப்பில் உருவான படம். அங்கமுத்து அதில் பிரதான  வேடத்தில் நடித்தார். ஏ.வி.எம். தயாரித்த முதல் படமான ‘ரத்னாவளி’யிலும் நடித்தார். 1930- களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகள்  வந்து குவிந்தன. முதல் நிலை நடிகையாக அவரால் உயர முடியாமல் போனாலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

வசதியிலும் மாறாத எளிமையும் பிறருக்கு உதவும் மனப்பாங்கும்

தொடர்ந்து படங்கள் குவிந்ததால் பொருளாதார நிலையும் உயர்ந்தது. 1930-களிலேயே சென்னையில் மோட்டார் கார்கள் பரவலாக அறிமுகமாகத்  தொடங்கியிருந்தன. அதுவரை அலங்கரிக்கப்பட்ட காளைகள் பூட்டிய வில் வண்டிகளில் பயணம் செய்த திரை நட்சத்திரங்களும் பிரபலங்களும்  மோட்டார் கார்களுக்கு மாறி, தங்கள் அந்தஸ்து உயர்ந்துவிட்டதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திக் கொண்டார்கள். அங்கமுத்துவும்  நினைத்திருந்தால் ஒரு மோட்டார் காரை வாங்கியிருக்கலாம். கார் வாங்கும்படி பலரும் அவருக்கு  சிபாரிசும் செய்தனர்.

ஆனால் அங்கமுத்து அதை எல்லாம் ஒரு புன்சிரிப்பாலும் தலையசைப்பாலும் மறுத்துவிட்டார். வில் வண்டிதான் அவரது வாகனம் என்பது உலகறிந்த  ரகசியம். பல படக் கம்பெனிகள் வாடகைக்கார் அனுப்பத் தயாராக இருந்தபோதும் அவர் அதை விரும்பாமல் நிராகரித்து விட்டார். 60-கள் வரையில்  வில் வண்டியில்தான் படப்பிடிப்புகளுக்கு விரும்பிப் பயணித்தார். நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ நடிப்பதற்காகச் சொந்த ஊரை விட்டு  சென்னைக்கு வந்த பல நடிகையருக்கும் ஆதரவுக் கரம் நீட்டியதோடு அவர்களுக்கு ஆதரவாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவக்கூடியவராக  இருந்திருக்கிறார்.  

தனித்தன்மை மிக்க நடிப்பும் நடையும்

அங்கமுத்துவின் சிறப்புத்தன்மையே அவரது நடைதான்; அலட்டிக்கொள்ளாத அந்த நடை அவரது உடல்மொழியின் ஒப்பற்றதோர் சிறப்பு. ‘ஓர் இரவு’  படத்தில் கதாநாயகனைப் பார்த்து நாணிக் கோணி, ஒரு வெட்கச்சிரிப்பை உதிர்த்து விட்டு, ஒயிலாக நடந்து போவார். இவ்வளவுக்கும் வயதான  கதாபாத்திரம் தான். அதைப் பார்த்த மாத்திரத்தில் சிரிப்பு நம்மைத் தொற்றிக் கொள்ளும். அந்த உருவத்தை வைத்துக்கொண்டு அப்பாவியாகப் பார்ப்பது;  பேசுவது. அவ்வளவு போதும் நகைச்சுவையரசி அங்கமுத்துவுக்கு! சிவாஜி கணேசன் நடித்த ஆரம்ப காலப் படங்களில் ‘நானே ராஜா’ படத்திலும் ஒரு  சிறு காட்சியில் தோன்றுவார்.

வாரப் பத்திரிகைகளில் மனைவி கையில் பூரிக்கட்டையால் கணவனை அடிக்கும் நகைச்சுவைத் துணுக்குகள் ஏராளம் இடம்பெறுவதைப் போல்தான்  இக்காட்சியும். காற்றடித்தால் பறந்து போய் விடும் தோற்றத்தில் உள்ள ஒரு நபருக்கு மனைவியாக, தேன்மொழி என்ற பெயரில் சில நிமிடங்கள்  மட்டுமே தோன்றுவார். இதுதான் உடலை வைத்து நபரைக் கேலி செய்வது என்பது. இந்த உத்தி இவர் நடித்த பல படங்களிலும்  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்க்கும்போது சிரித்து வைத்தாலும், பின்னர் யோசிக்கும்போது மிகப் பெரிய வன்முறையாகத் தோன்றும்.  ‘சதாரம்’ என்ற  படத்தில் “அங்கும் இங்கும் பார்த்திடாமல் ஆளைப் பாரு ராஜா” என்று பாடும்போது யார்தான் சிரிக்காமல் இருக்க முடியும்? எம்.ஜி.ஆர்.

நடித்த ‘புதுமைப்பித்தன்’ படத்தில் உடல் பருத்த அங்கமுத்து ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ‘பூங்கொடி!’; என்ன நகைமுரண்! பொதுவாகவே  எம்.ஜி.ஆரின் படங்களில்தான் அங்கமுத்து அதிகமாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் கூடைக்குள்  கோழியை மறைத்து வைத்துக்கொண்டு பேருந்தில் பயணம் செய்யும்போது, கண்டக்டர் நாகேஷிடம் மாட்டிக் கொண்டு கோழியும் பஸ்ஸை விட்டு ஓட,  அதைத் துரத்திக் கொண்டு நாகேஷும் பின்னால் ஓட, பிரச்சனையை சமாளிக்கச் சாமியாட்டம் போடும் அங்கமுத்துவின் அலப்பரை வயிறு நோக  வைக்கும்.  

‘பராசக்தி’ படத்திலும் பழக்கூடை சுமந்துகொண்டு வரும்போது, கூடை கீழே தட்டி விடப்பட்டு பழங்கள் சிதறி ஓட ஆர்ப்பாட்டமாக அமர்க்களப்படுத்தும்  நடிப்பிலும் அவருக்கு இணை அவரே…. ‘சர்வாதிகாரி’ படத்தில் கதாநாயகி அஞ்சலிதேவியின் உற்ற தோழி. மிடுக்காக நடந்து, அதிகாரமாகப் பேசி  அவர் தோன்றும் காட்சியெல்லாம் அதிர வைப்பார். நகைச்சுவையைக் கடந்து இப்படத்தில் வில்லியாகத்தான் தோன்றினார். அந்தப் படத்தில் எல்லாக்  கதாபாத்திரங்களுமே ஐரோப்பிய பாணி உடையணிந்து வருவார்கள்.  அங்கமுத்துவின் உடையலங்காரமும், தலையலங்காரமும் தனித்துத் தெரியும்.

‘தங்கமலை ரகசியம்’ சொல்லிய ‘ராஜாக் காது கழுதைக் காது’ நினைக்கும்தோறும் சிரிக்க வைக்கும் காட்சியல்லவா? பெண்ணால் ரகசியம் காக்க  முடியாது என்பதற்கு சரியான உதாரணம் அங்கமுத்துவின் அந்த நகைச்சுவைக் காட்சி. எத்தனை எத்தனை பாத்திரங்கள் ஏற்றபோதும் அத்தனையிலும்  சிரிப்பே பிரதானம். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’, ‘தங்கமலை ரகசியம்’, எம்.ஜி.ஆர். நடித்த திருப்புமுனைத் திரைப்படமான ‘மந்திரிகுமாரி’,  ‘மதுரை வீரன்’, ‘சர்வாதிகாரி’ கமல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் கடைசியாக  நடித்து 70-களின் இறுதியில் வெளியான படம் ரஜினிகாந்த் நடித்த ‘குப்பத்து ராஜா’. 5 தலைமுறை நடிக நடிகையர்களுடன் நடித்த பெருமையும்  அங்கமுத்துவுக்கு உண்டு.

பிறரையும் கவர்ந்தவர்  

அங்கமுத்துவை, பின் நாட்களில் ஓரளவுக்குப் பிரதிபலித்த நடிகை என்றால் காந்திமதியைச் சொல்லலாம். வசனம் பேசும் பாணி, அடாவடித்தனமான  கதாபாத்திரங்கள், அலட்சியமாய் எதிராளியின் மீது வீசும் ஓரப் பார்வை, இடுப்பில் ஒரு கையை வைத்தபடி, மறு கையை வீசி வீசி நடக்கும் ஒயிலான  அன்ன நடை நடக்கும் பாங்கு, இவை அனைத்தும் இருவருக்கும் பொதுவான ஓர் அம்சமாகவே தோன்றும். அதேபோல சிறு வேடம் என்றாலும்  தயங்காமல் ஏற்கும் குணாதிசயமும் கூட.  கலைஞர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் ஒருமுறை ‘உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?’ என்று  கேட்டபோது, அவர் குறிப்பிட்டது அங்கமுத்து மற்றும் அஸ்வத்தம்மா இருவரின் பெயர்களைத்தான்..!

துயர் சூழ்ந்த இறுதிக்காலம்

அங்கமுத்து திருமணம் செய்து கொள்ளாமல், தன்னைச் சார்ந்து வாழ நேர்ந்த குடும்பத்தினரின் சுமையைத் தனதென்று தாங்கிக்கொண்டார். ஆனால்  அவரது வாழ்க்கையின் பிற்பாதியில் வறுமை தாண்டவமாடியது. ரசிகர்களை மகிழ்விக்க நகைச்சுவை நடிகர்கள் தங்கள் உடல் நலத்தை எவ்வளவு  கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு அங்கமுத்து ஒரு சிறந்த உதாரணம். அங்கமுத்துவின் உடல் பருமனே கடைசியில் அவருக்கு எமனானது.

சர்க்கரைச் சத்து அதிகமானதன் காரணமாகக் கண் பார்வையை இழந்தார். நடமாட முடியாமல் வீட்டுக்குள் முடங்கிப் போனார். அரசு அளித்த  மானியத்தொகையும் கூட அவருக்குப் போதுமானதாக இல்லை; அவர் உயிரைக் காக்க உதவவும் இல்லை. கடுமையான நீரிழிவு நோய் தாக்கியதால்  அரசு மருத்துவமனையில்தான் அவரால் சிகிச்சை மேற்கொள்ள முடிந்தது. அங்கமுத்து நம் நினைவுகளில் மட்டும் தங்கிப் போனார்.

அங்கமுத்து நடித்த படங்கள்

நந்தனார், மிஸ் சுந்தரி, மீராபாய், பக்த துளசிதாஸ், டம்பாச்சாரி, மாயாபஜார், ரத்னாவளி, பார்வதி கல்யாணம், சாமுண்டீஸ்வரி, சேது பந்தனம்,  மந்திரிகுமாரி, பராசக்தி, நானே ராஜா, தங்கமலை ரகசியம், மதுரை வீரன், களத்தூர் கண்ணம்மா, மருமகள், எதிர்பாராதது, காவேரி, மோகனசுந்தரம்,  எங்க வீட்டு மகாலட்சுமி, தெய்வப்பிறவி, நாடோடி மன்னன், அந்தமான் கைதி, போன மச்சான் திரும்பி வந்தான், வீட்டுக்கு வந்த மருமகள், ராஜா  ராணி, பிள்ளைக் கனியமுது, களத்தூர் கண்ணம்மா, மங்கையர் திலகம், ரத்தக் கண்ணீர், தெய்வீக உறவு, சர்வாதிகாரி, சதாரம், செஞ்சு லட்சுமி,  பெண்ணின் பெருமை, நினைப்பதற்கு நேரமில்லை, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, டவுன் பஸ், பொண்ணு மாப்பிள்ளே, கண்மலர், தேனும் பாலும், புகுந்த  வீடு, குப்பத்து ராஜா.

(ரசிப்போம்!)

Related Stories: